“ஒரு கோயில் கட்டப்பட்டால் அனைவரும் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்பது தவறானது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி 24) மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, அவரிடம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிய பிறகு அதை பற்றிய பேச்சுதான் அதிகமாக இருக்கிறது. அரசியலாக்கப்பட்டு வருகிறது. இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், “எல்லா கோயில்களும் அவ்வப்போது கட்டப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் எத்தனையோ கோயில்களை கட்டியிருக்கிறோம். கோயில் கட்டினால் மக்கள் ஆதரிப்பார்கள் என்றால் ஒவ்வொருவரும் கோயில் கட்ட போய்விடுவார்கள்.
இந்துக்கள் ராமர் கோயில் கட்டுகிறார்கள். இஸ்லாமியர்கள் மசூதிகள் கட்டுகிறார்கள்.
அதிமுக அட்சியில் அதிக குடமுழுக்கு செய்திருக்கிறோம். ஆலைகள் புதுப்பிக்கப்பட்டது. மசூதிகள், தேவாலயங்களை புதுப்பிக்க நிதி கொடுத்தோம். அதிமுக மதத்துக்கும், சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி.
அந்தந்த மதம் அவர்களுக்கு புனிதமானது. ஆங்காங்கே கோயில் கட்டுகிறார்கள். அவரவர் விருப்பத்துக்கு வணங்குகிறார்கள்.
இந்த நாடு பல்வேறு மதங்கள், சாதிகள் கொண்ட அமைப்பு. அந்தந்த மதத்தினர் ஆலயங்கள், தேவாலயங்கள், மசூதிகள் கட்டுகின்றனர். அவரவர்களுக்கு பிரியப்பட்டவாறு பிரார்த்தனை செய்கின்றனர்.
ஒரு கோயில் கட்டினால் எல்லோருமே அவர் பக்கம் போய்விடுவார்கள் என்பது தவறான கருத்து” என்றார்.
திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் வீட்டில் பணி செய்த பெண் கொடுமைப்படுத்தப்பட்ட விவகாரம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்களே தவிர நடவடிக்கை எடுக்கவில்லை. உரிய நடவடிக்கை எடுக்காத விடியா திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பிப்ரவரி 1ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்றார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து பேசிய அவர், “போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் 100 சதவிகிதம் நிறைவேற்றப்படும் என்று சட்டமன்ற தேர்தலின் போது சொன்னார்கள். ஆனால் எதையும் செய்யவில்லை. பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதுவும் தோல்வியில் முடிந்துவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களை ஏமாற்றும் அரசுதான் இந்த திமுக அரசு” என்றார்.
மேலும் அவர், “மக்களவை தேர்தலுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படும். வெவ்வேறு கருத்துகள் கொண்ட கட்சிகள் தான் இந்தியா கூட்டணியில் இணைந்தன. அது எப்படி சரியாக இருக்கும்?
அந்தக் கட்சிகள் இணைந்து செயல்படுவது கடினம்” என கூறினார் எடப்பாடி பழனிசாமி.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பாக்ஸ் ஆபிஸை ஆளும் அயலான் : இத்தனை கோடி ரூபாய் வசூலா?
கிளாம்பாக்கத்திற்கு மாற்ற முடியாது: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திட்டவட்டம்!