தற்போதைய சூழலில் நான் ராஜினாமா செய்யமாட்டேன் என்று மணிப்பூர் முதல்வர் கூறியுள்ளார்.
மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இதனால் வன்முறைக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்ய அம்மாநில முதல்வர் பைரன் சிங் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
முதலில் பிற்பகல் 1 மணிக்கு ஆளுநரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பு 3 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
முதல்வர் ராஜினாமா செய்ய போகிறார் என்ற தகவல் பரவியதும், இம்பாலில் உள்ள பைரன் சிங் வீடு முன்பும் ஆளுநர் மாளிகை முன்பும் அவரது ஆதரவாளர்களும், பெண்களும் குவிந்தனர்.
பிற்பகலில் அவர் காரில் வீட்டில் இருந்து வெளியே வந்தபோது, ‘முதல்வர் ராஜினாமா செய்யக் கூடாது’ என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். அவரது ராஜினாமா கடிதத்தையும் கிழித்தெறிந்தனர். அதோடு முதல்வர் வாகனத்தை செல்ல விடாமல் மனித சங்கிலி போல் நின்றதாகவும், இதனால் அவர் மீண்டும் தனது இல்லத்துக்கு சென்றுவிட்டதாகவும் ஆங்கில ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தசூழலில், “இப்படியொரு தருணத்தில், நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பைரன் சிங்.
பிரியா