மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய மூத்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அவர் குறித்து உருக்கமுடன் பகிர்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரசியலிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக வலம் வந்த ஆர்.எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாக தனது இன்று காலமானார். (வயது 98).
இதனையடுத்து சென்னை, தி.நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
ஆர்.எம்.வீ உடனான நட்பு புனிதமானது!
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து நம் எல்லாரையும் பிரிஞ்சிருக்கார் உத்தமர் ஆர்.எம்.வீரப்பன் சார். அமரர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய தனிப்பட்ட வாழ்க்கை, சினிமா, அரசியல் வாழ்க்கை என அனைத்திலும் அவரது வலது கையாக இருந்தவர் ஆர்.எம்.வீ சார்.
அவரால் உருவாக்கப்பட்ட அவருடைய பல சிஷ்யர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி கல்வி நிறுவன அதிபர்களாகி பேரும் புகழும் பணத்துடனும் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆர்.எம்.வீரப்பன் எப்பவும் பணத்துக்கு பின் போனவர் அல்ல. அண்ணா சொன்னது போல் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிச்சு வாழ்ந்தவர். எனக்கும் ஆர்.எம்.வீரப்பனுக்கும் இருந்த நட்பு மிகவும் ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது.
இப்போது அவர் நம் கூட இல்லை என்பதால் இதை சொல்லவில்லை. என் வாழ்நாளில் நான் அவரை மறக்கவே முடியாது. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என பேசினார்.
அரசியலிலும், கலையுலகிலும் அவர் மூதறிஞர்!
தொடர்ந்து கமல்ஹாசன் பேசுகையில், “ஆர்.எம்.வீரப்பன் கலை உலகில் இருந்து பின்னர் அரசியலுக்கு சென்ற போதும் அவர் எனக்கு உயர்ந்த உருவமாக தான் தெரிந்தார். அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் காக்கி சட்டை என்ற வெற்றி படத்தில் நடித்துள்ளேன்.
அரசியலிலும் சரி, கலையுலகிலும் சரி அவர் மூதறிஞர். அவரிடமிருந்து அவரது அனுபங்களை நானும் பகிர்ந்துகொண்டேன் என்றால் மிகையாகாது. எம்.ஜி.ஆரின் வலக்கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமால் என்றும் அவரது நினைவாகவே வாழ்ந்து மறைந்துள்ளார். அவருக்கு என் அஞ்சலிகள் என்று தெரிவித்துள்ளார்.
இதே போன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா துறையினரும் ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆர்.எம்.வீரப்பனின் உடல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நாளை தகனம் செய்யப்படுகிறது.
யார் இந்த ஆர்.எம்.வீரப்பன்?
மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஜானகி ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு துறை அமைச்சராக ஆர்.எம் வீரப்பன் முக்கிய பொறுப்புகளை வகித்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், எம்.ஜி.ஆர் மீது பற்றால் எம்ஜிஆர் கழகத்தை நிறுவி அரசியல் பணியாற்றி வந்தார்.
இது தவிர தனது சத்யா மூவீஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் எம்ஜிஆரின் காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாக்காரன், இதயக்கனி என வெற்றிப்படங்களைத் தயாரித்தவர்.
அதே போன்று நடிகர் ரஜினிகாந்தின் ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், பணக்காரன், பாட்ஷா மற்றும் கமல்ஹாசனின் காக்கிசட்டை என பல சூப்பர்ஹிட் வெற்றிப் படங்களையும் அவர் தயாரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் ஐ.டி ரெய்டு!
எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டிற்கு வருகிறார்?: ஸ்டாலின் கேள்வி!