இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன். அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என்று சமக தலைவர் சரத்குமார் பேசியுள்ளார்.
மதுரை பழங்காநத்தம் சுற்றுசாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7 வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக்கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று(மே28) நடைபெற்றது.
இந்த பொதுகூட்டத்தில் ஏராளமான சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பொதுக்கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பேசுகையில், ”தீர்மான விளக்க கூட்டத்தில் வாயிலாக உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும்.
மது உடல் ஆற்றலை இழக்க செய்து மனஅழுத்தத்தை உண்டாகி வருகிறது.
பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்றவை உருவெடுத்து உள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2025 ல் இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக இந்தியா உருவாகும் என்பதனை அடுத்து இளைஞர்களின் மூளையை மலுங்கடிக்க செய்வதற்கான வெளிநாடுகளின் சதிதான் இது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும். தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும்.
பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன், அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடங்குளம் வந்தால் தான் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும் என்பதற்காக உடலை வருத்தி உண்ணாவிரதம் செய்தேன், அதன் படி தற்போது பொருளாதாரம் முன்னோக்கி வருகிறது.
தமிழகத்தின் கல்வி இந்திய அளவில் சிறந்ததாக திகழும் சூழலில், அறிவார்ந்த இளைஞர்கள் இருந்தும் போதைக்கு அடிமையாக இருப்பதால் தமிழ்நாடு தள்ளாடுகிறது.
“social Drinking” என்கிற பேரில் பணியிடங்களில் மேலை நாட்டு கலாச்சாரங்களை இளைஞர்கள் தவிர்க்கவேண்டும். மாலை வேலைக்கு பிறகு வீட்டிற்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊத சொல்லி சோதனை செய்யுங்கள் அதில் தவறே இல்லை.
எனக்கு 69 வயது ஆகிறது. இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன். அதனை 2026 ஆண்டு முதல்வர் அரியணையில் என்னை ஏற்றினால் சொல்வேன்.” என்று கூறினார்.
சரத்குமாரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், அவரை சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
தாக்கப்பட்ட வருவாய் ஆய்வாளர்.. நீக்கப்பட்ட திமுக நிர்வாகி: தொடரும் போராட்டம்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது: ஜிஎஸ்எல்வி – எப் 12 !