உங்களை விட 30 சதவிகிதம் அதிக வாக்குகளை வாங்கிக் காட்டுகிறேன் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
சென்னையில் இன்று (செப்டம்பர் 2) செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் வாவேற்கிறோம். 1952, 1957, 1962, 1967 என 4 முறை லோக்சபா, சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே தேர்தலாக நடைபெற்றிருக்கின்றன.
356 சட்டப்பிரிவை பயன்படுத்தி 105 முறை மாநில ஆட்சிகளை காங்கிரஸ் கலைத்திருக்கிறது. 356 பயன்படுத்தப்பட்ட பிறகு லோக் சபா தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் மாறிப்போக ஆரம்பித்துவிட்டது.
இதையடுத்து 1983ல் இந்திய தேர்தல் ஆணையம் மீண்டும் லோக் சபா தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.
1989ல் பிபி ஜீவன் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட சட்டக்குழு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தனர். அதைத்தொடர்ந்து பாஜக ஒரே தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.
ஒரு ஆண்டுக்கு 8,9 மாநிலங்களில் தேர்தல் நடக்கின்றன. இதனால் மாவட்ட ஆட்சியர் தொடங்கி அங்கன்வாடி பணியாளர்கள் வரை பல அரசு அதிகாரிகள் 6 மாதம் காலம் வரை தேர்தல் வேலையை கவனிக்க வேண்டியிருக்கிறது.
எனவே தான் ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று சொல்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையதான் செய்யும். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் செலவு அதிகரிக்கும் என்று எப்படி சொல்கிறார் என தெரியவில்லை” என்றார்.
“எந்த கட்சியையும் நான் எங்கும் தவறாக பேசமாட்டேன். வளர வேண்டும் என்று நினைத்தால் நம்முடைய முயற்சியால் வளர வேண்டும் என்று நினைப்பேன். நான் சொல்லாததை சொல்லியதாக போடுகிறார்கள். அதை வைத்து அதிமுகவிடம் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் சொல்லும் கருத்தை பாஜகவினரிடம் கேட்கிறார்கள்” என்று அதிமுகவை குறிப்பிட்டு பேசினார் அண்ணாமலை.
பத்து ஆண்டுகள் ஆட்சியில் உள்ள பாஜக என்னை எதிர்த்து போட்டியிட்டு ஒரு சதவீத வாக்கு அதிகம் பெற முடியுமா என்று சீமான் எழுப்பியிருக்கும் கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, “சவாலுக்கு நான் தயார். ஒரு சதவிகிதம் என்ன? 30 சதவிகிதம் அதிகமாக வாங்கிக் காட்டுகிறோம். நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும். இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்ததா? அல்லது மாநிலத்தில் ஆட்சிக்கு வரப்போகிறதா? அந்த கட்சியின் கொள்கைகள் என்ன?. சீமானின் சவாலை, பாஜக தொண்டரே ஏற்பார். எல்லாவற்றுக்கும் நாங்கள் தயார்” என்றார்.
நான் தனியாக போட்டியிடுவேன், பாஜக தனியாக போட்டியிடுமா என்று சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, “அண்ணாமலை ஒப்பீனியன் என்னவென்று உங்களுக்குத் தெரியும், பாஜக டெல்லி ஒப்பீனியன் என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதனால் என்னுடைய கருத்துகளை நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். தேசிய ஜனநாயக கூட்டணியை யார் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறார்களோ, அவர்களை அரவணைத்து செல்லக் கூடிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. சீமான் கட்சியை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை” என விமர்சித்தார் அண்ணாமலை.
பிரியா
அரசு வேலைகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு… டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு!