”சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என இன்று (டிசம்பர் 30) நீதிமன்றத்தில் ஆஜரான வருண்குமார் ஐபிஎஸ் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் அவரது மனைவியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருமான வந்திதா பாண்டே ஆகியோர் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் பேசியதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் எஸ்பி வருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் மதுரை, சிவகங்கையை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல், சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது தனிப்பட்ட முறையில் வருண்குமார்வழக்கு தாக்கல் செய்ததுடன், தனது புகழுக்கு களங்கம் விளைவித்த சீமான், மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி தர வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்தார்.
அவரின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், தனது வழக்கறிஞர் முரளி கிருஷ்ணனுடன் நீதிபதி (பொறுப்பு) பாலாஜி முன்பு சாதாரண உடையில் வருண்குமார் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரது விளக்கத்தை கேட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மிரட்டலுக்கு பயந்த ஆள் நான் இல்லை!
பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருண்குமார் பேசுகையில், “நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூலை மாதம் நடத்திய பத்திரிகை சந்திப்பில் என்னை தாக்கி பேசியிருந்தார்.
நான் சாதி ரீதியாகவும், பிறப்பு வெறுப்பு அடிப்படையில் செயல்படுவதாகவும் பேசியிருந்தார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. நான் என்னுடைய அதிகாரத்துக்குட்பட்டு தான் பணி செய்கிறேன்.
ஆனால் இப்படியெல்லாம் பேசுவதன் மூலம் சீமான் என்னை மிரட்டி பார்க்கலாம் என்று நினைத்தார். இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயந்த ஆள் நான் இல்லை.
எனக்கு எதிராக முற்றிலும் பொய்யாக அவர் வைத்த குற்றச்சாட்டை என்னால் ஏற்க முடியவில்லை. தொடர்ந்து 4 பத்திரிகையாளர்கள் சந்திப்புகளில் என்னைப் பற்றியும், என் மனைவி, என் பிள்ளைகளை அவதூறாக பேசினால் நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். எடுத்துள்ளேன்.
சீமானுக்கு என்ன உரிமை இருக்கிறது?
நான் சாதாரண குடும்பத்தில் இருந்து தான் கஷ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். என் தாய் வழி, தகப்பன் வழி முன்னோர்கள் ராமநாதபுரம், திருச்சியைச் சேர்ந்தவர்கள். என் சொந்த ஊரு ராமநாதபுரம். நான் படித்து வளர்ந்தது எல்லாம் திருச்சி.
‘அவரு தமிழனா?’, அவரு தாய்மொழி என்ன என்று கேட்கிறார். என் தாய்மொழி என்ன என்று கேட்பதற்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறது.
எந்த சட்டைய அணிவதற்காக நான் கஷ்டப்பட்டு, தவம் கிடந்து படிச்சி வந்தேனோ, அதை கழற்றிவிட்டு வா என்கிறார்.
சீமான் மைக் முன்னால் தான் புலி, மற்ற இடங்களில் எல்லாம் எலி. இந்த பிரச்சனைக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த தொழிலதிபரை அனுப்பி விட்டார். அவரிடம், ’நான் டிண்ட் போட்ட காரில் வந்து மன்னிப்பு கேட்கிறேன்’ என்று தெரிவித்தார்.
நான் அதை ஒத்துக்கொள்ளவில்லை, எனக்கு அதில் உடன்பாடு இல்லை. என் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து அவரது கட்சியினர் வெளியிட்டனர். என் குழந்தைகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால் பொது வெளியில் மன்னிப்பு கேட்கட்டும் என்று சொல்லிவிட்டேன்.
மார்பிங் செய்தவர்கள் என் கட்சியினர் இல்லை என்று சொல்கிறார். ஆனால் கைது செய்யப்பட்ட நபர்கள் அவருடைய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். அவருடையை கட்சியை சேர்ந்தவர்கள் தான் ஜாமீன் மனு போட்டார்கள்.
ஒரு முதிர்ச்சியுள்ள கட்சி தலைவராக அவர் இந்த செயலை கண்டித்திருக்க வேண்டும். ஆனால், ’எங்களை பற்றி எழுதினார்கள்.. உங்களை பற்றி எழுதினால் பொறுத்து போங்கள்’ என்கிறார். என்ன மாதிரியான மனநிலை கொண்டவர் அவர்?
சீமானின் பேச்சுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று வருண்குமார் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
பரங்கிமலையில் ரயில் முன் தள்ளி மாணவி கொலை : குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!