மக்கள் நீதி மய்யம் சார்பில் இன்று(செப்டம்பர் 22) கோவையில் நடைபெற்ற “கோவை மண்டல நிர்வாகிகள்” கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.
இதில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விரிவாக உரையாற்றி கட்சி நிர்வாகிகளுக்கு அடுத்தகட்ட செயல்திட்டங்களை பற்றி கூறியுள்ளார் கமல்.
இக்கூட்டத்தில் பேசிய கமலஹாசன், “கடந்த தேர்தல்களில் நாம் பெற்ற அனுபவங்களின் துணையோடு நாடாளுமன்றத் தேர்தலை சிறப்பாக எதிர்கொள்வோம்” என்றார்.
மேலும் அவர், “இந்த வயதில் அரசியலுக்கு வந்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமே தவிர இனியும் தாமதப்படுத்தக் கூடாது.
‘நீ ஏன் திமுகவுக்கு வரக்கூடாது’ என்று என்றைக்கோ எனக்கு கலைஞர் தந்தி அடித்தார். இதெல்லாம் நமக்கு எதற்கு என அப்போது நான் நினைத்துக்கொண்டேன். நான் கலைஞன் அப்படியே இருந்துவிடுவோம் என்று நினைத்துவிட்டேன்.
பதிலுக்கு, நான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரலாமென இருக்கிறேன் என்றோ, காங்கிரஸில் சேர போகிறேன் என்றோ சொல்லியிருக்க வேண்டும். நான் பங்கெடுத்து கொள்ளவில்லை. அதன் பிறகு அவரும் பேசவில்லை.
ஆனால் நான் அன்று இறங்கியிருக்க வேண்டும். என் அப்பா வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருக்கும் போதே இறங்கிவிட்டார். அப்போது இந்த பெருமையெல்லாம் என்னவென்று எனக்கே தெரியாது” என கூறினார்.
மேலும் அவர், “கோவையை பொறுத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. 2 ஆயிரத்துக்கும் அதிகமான பூத்துகள் இருக்கின்றன.
இதில் வேலை செய்ய 40 ஆயிரம் பேர் வேண்டும். கோவைக்கு வாருங்கள் எனக் கூப்பிடுவது மட்டும் போதாது. வேலை செய்ய 40 ஆயிரம் பேரை தயார் செய்ய வேண்டும்” என்றார்.
விக்ரமுக்கு சேர்ந்த கூட்டம் மக்கள் நீதி மய்யத்துக்கு சேரவில்லை என்று சொல்வதை நம்பமுடியுமா என்று குறிப்பிட்ட கமல், “எனக்கு மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுக்கொண்டு வந்து கோவையில் நிற்பேன். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் வேலை செய்ய நீங்கள் தயாராக வேண்டும்.
நல்ல தலைமை தமிழ்நாடு முழுவதும் வர வேண்டும். நமது அஜாக்கிரதையால் நாம் பலியாகிவிடக் கூடாது.
தனியாக தேரை இழுக்க முடியாது. ஊரை கூட்டித்தான் தேரை இழுக்க முடியும். நேர்மையாக இருந்தால் எங்கும் மரியாதை உண்டு. அவர்களே நம்மை அழைப்பார்கள். அதற்கான அழைப்பிதழை அச்சடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்” என்று கூட்டணி குறித்து கமல் பேசியதாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பிரியா
உள்துறை செயலாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
ஆய்வறிக்கைகளே முக்கியம்: திட்டக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்!