ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் தற்போது சூடுபிடித்துள்ளது.
அந்தவகையில், பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணி இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தேர்தலில் போட்டியிடுவது எனக்கு முதல் முறையாக இருக்கலாம்.
ஆனால், தேர்தலுக்கான வேலைகளில் ஈடுபடுவது எனக்கு புதிய விசயம் அல்ல.
தருமபுரி, பென்னாகரம் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களும் எனக்கு தெரியும். அனைத்து கிராமங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். அங்குள்ள மக்களுக்கும் என்னை நன்றாகத் தெரியும்.
திமுக – அதிமுக ஆகிய கட்சிகள் எதிரில் இருந்தாலும் தைரியமாக பாமக அதனை எதிர்கொள்ளும்.
மக்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பெண்களின் ஆதரவு மிக அதிகமாக இருக்கிறது.
நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும், முதல் பெண் வேட்பாளர் நான். அதனால், பெண்களின் ஆதரவு எனக்கு அதிகமாக இருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் 3 லட்சம் இளைஞர்கள், மக்கள் வேலைவாய்ப்பிற்காக வெளி மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.
அவர்களைத் தாயகத்திற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சிப்காட் போன்ற தொழிற்சாலை வளாகங்கள் தருமபுரியில் அமைக்கப்பட உள்ளன.
சிப்காட் நிறுவனங்களை ஓரிரு ஆண்டுகளுக்குள் தருமபுரியில் அமைத்து, இங்குள்ள இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க நான் முயற்சி செய்வேன்.
தருமபுரியில் உற்பத்தி செய்யப்படும் தக்காளி, புளி, மாம்பழம், பருத்தி மற்றும் பட்டுப்புழு உற்பத்தி போன்ற அனைத்து விளைபொருட்களின் மதிப்புக் கூட்டி விற்க ஏற்பாடுகள் செய்யப்படும்.
தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக பயிறு வகைகள், சாமை வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதற்கான வணிக முறைகளை எவ்வாறு பெருக்குவது எனவும் ஆலோசனை நடத்தி அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயற்சிப்போம்.” என சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.