மகாராஷ்டிரா அடுத்த முதலமைச்சர் யார் என கேள்வி எழுந்துள்ள நிலையில், ‘பிரதமர் மோடி எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவேன்’ என ஏக்நாத் ஷிண்டே இன்று (நவம்பர் 27) தெரிவித்துள்ளார்.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 132 தொகுதிகளை கைப்பற்றியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
மஹாயுதி கூட்டணியின் இந்த வரலாற்று வெற்றியைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரான ஏக்நாத் ஷிண்டே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை மும்பை ராஜ்பவனில் ஆளுநர் ராதாகிருஷ்ணனிடம் அவர் அளித்தார். தற்போது புதிய மஹாயுதி கூட்டணி அரசின் காபந்து முதல்வராக ஏக்நாத் ஷிண்டே செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் அடுத்த முதல்வராக யார் பதவியேற்கிறார் என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்பாரா? அல்லது ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தநிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘வர்ஷா’வில் இன்று மாலை 4 மணியளவில் ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்த வேலையில் திருப்தி!
அப்போது அவர், “மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மகாயுதி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. வெற்றி மக்களுடையது. மகாயுதி உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தனர். நானே அதிகாலை வரை வேலை செய்தேன்.
நான் என்றுமே என்னை முதலமைச்சராக கருதவில்லை. இன்றும் நான் என்னை ‘சேவகன்’ என்றே கருதுகிறேன். அரசு திட்டங்கள் மூலம், குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏதாவது செய்துள்ளோம். நான் செய்த வேலையில் திருப்தி அடைகிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு நன்றி” என கூறினார்.
எந்த முடிவை எடுத்தாலும் ஏற்பேன்!
தொடர்ந்து அவர், “நான் நேற்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது ஆட்சி அமைப்பதில் உங்களின் முடிவில் எந்தத் தடையும் இல்லை என்று அவரிடம் கூறினேன்.
மேலும், என்னால் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் ஏதேனும் சிக்கல் எழுந்துள்ளதாக உங்கள் மனதில் எந்த சந்தேகமும் ஏற்பட வேண்டாம்.நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும், அந்த முடிவை நான் ஏற்பேன். உங்கள் முடிவை பாஜகவினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்களோ, அதேபோன்று நாங்களும் (சிவசேனா கட்சியினர்) உங்கள் முடிவை ஏற்றுக்கொள்வோம் என பிரதமரிடம் கூறியுள்ளேன்.
மகாயுதியில் யார் முதல்வராக தேர்வு செய்யப்பட்டாலும், அவருக்கு சிவேசேனா கட்சியினர் ஆதரவு அளிப்பார்கள்.
மஹாயுதியை ஆதரித்து, எங்களுக்கு மகத்தான வெற்றியை அளித்ததற்காக, மகாராஷ்டிராவின் அனைத்து வாக்காளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
அமித் ஷாவும், பிரதமர் மோடியும், பாலாசாகேப் தாக்கரேவின் ’சிவசேனாவின் தொண்டர் ஒருவர் முதல்வராக வேண்டும்’ என்ற கனவை நிறைவேற்றியுள்ளனர்.
நாளை இறுதி முடிவு எடுக்கப்படும்!
கடந்த 2-4 நாட்களாக யாரோ ஒருவர் ஏமாற்றப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. மஹாராஷ்டிராவில், பாஜகவின் முடிவே இறுதியானது. முதல்வர் பதவி தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர்கள் எந்த முடிவை எடுத்தாலும், அதை சிவசேனா முழுமையாக ஆதரிக்கும்.
அமித்ஷாவுடன் நாளை (நவம்பர் 28) மூன்று கட்சிகளின் (மகாயுதியின்) கூட்டம் நடைபெறும். அந்த கூட்டத்தில் விரிவான விவாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
அடுத்த முதலமைச்சராக ஷிண்டே மீண்டும் பதவியேற்க வேண்டும் என அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த நிலையில், இன்று அவரது பேச்சு சிவசேனா கட்சிக்குள்ளேயேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உருவாகிறது ஃபெங்கல் புயல்… 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!
ரூ.50 கோடிக்கு திருமண வீடியோவை சோபிதாலா விற்றாரா? உண்மை என்ன தெரியுமா?