மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வதை நான் வரவேற்கிறேன் என்று திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திமுக சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு, “ஆயிரக்கணக்கான தலித் மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆலயப்பிரவேசம் அழைத்துச் சென்ற புரட்சிகரமான தலைவர் முத்துராமலிங்க தேவர். பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக அவர் வெற்றி பெற்றுள்ளார்.
ஆன்மீகத்தையும், அரசியலையும் அவர் ஒன்றுக்கொன்று மோதல் இல்லாமல் கடைபிடித்தார். ஜாதி வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்காகவும் போராடினார்” என்றார்.
தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
“மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்வதை நான் வரவேற்கிறேன். தமிழ்நாட்டிற்கும் சேர்த்து தான் அவர்கள் அமைச்சர்கள்.
நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்கள். அதில் தவறு ஒன்றும் இல்லை.” என்று தெரிவித்தார்.
முன்னதாக அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்வதை கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
ஹாலோவீன் கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம் : அதிகரிக்கும் உயிர்பலி!
இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!