’இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி’ : மேயர் பிரியாவின் தபேதார் மாதவி வேதனை!
“உங்களுடைய லிப்ஸ்டிக்கும், மேடம் (மேயர் பிரியா) லிப்ஸ்டிக்கும் ஒரே மாதிரி இருக்கிறது. நீங்கள் லிப்ஸ்டிக் எல்லாம் போடாதீர்கள்” என்று தன்னை மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் எச்சரித்ததாக தபேதார் மாதவி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் தபேதாராக 50 வயதான மாதவி பணியாற்றி வந்தார். மேயர் வருகிறார் என்பதை அறிவிக்கும் விதமாக அவருக்கு முன்பாக செல்வதுதான் தபேதாரின் பணி.
இவருக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கர் மெமோ வழங்கியுள்ளார். அதில் “நீங்கள் பணிக்குத் தாமதமாக வருகிறீர்கள், கொடுக்கப்பட்ட பணியைச் சரியாகச் செய்வதில்லை மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவை மீறியுள்ளீர்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு தபேதார் மாதவி பதில் விளக்கம் அளித்த நிலையில் அவர் மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்த செய்தி வெளியாகி சர்ச்சையான நிலையில், மேயர் பிரியா தபேதார் பணியிட மாற்றம் தொடர்பாக ஊடகத்திற்கு விளக்கமளித்தார். அவர், “தபேதார் மாதவி சில தினங்களுக்கு முன்பு ரிப்பன் கட்டடத்தில் நடந்த ஃபேஷன் ஷோவில் பங்கேற்றுள்ளார். அதில் அவரது தோற்றமும், செயலும் சரியாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்திருந்தார்கள்.
இதுமட்டுமல்லாமல், அவர் பயன்படுத்தும் லிப்ஸ்டிக் பளிச்சென்று இருக்கிறது. அதை மாற்றவும் என்று அவரிடம் எனது தனிச் செயலாளர் சிவ சங்கர் தெரிவித்திருந்தார். லிப்ஸ்டிக் பயன்படுத்தியதால் தான் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்பது தவறான தகவல்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தபேதார் மாதவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
“நீங்கள் லிப்ஸ்டிக் எல்லாம் போடாதீர்கள் என எச்சரித்தனர். என்னை மட்டுமல்ல, சக ஊழியர்களையும் கூறினார்கள்.
சக ஊழியர் ஒருவரை பார்த்து அவரை போன்று லிப்ஸ்டிக் போடுங்கள். உங்களுடைய லிப்ஸ்டிக்கும், மேடம் (மேயர் பிரியா) லிப்ஸ்டிக்கும் ஒரே மாதிரி இருக்கிறது என்றனர்.
அதற்கு நான், ”சின்ன வயதில் இருந்தே லிப்ஸ்டிக் போட்டு வருகிறேன். இப்போது இதை மாற்ற வேண்டும் என்றால் முடியாது. என்னுடைய கலருக்கு என்ன பிடிக்குமோ அதை தான் பயன்படுத்த முடியும் என்று கூறிவிட்டேன்”
இதுமட்டுமல்ல, அருகில் உள்ள மற்ற துறைகளுக்கு செல்லக்கூடாது பேசக்கூடாது என்று சொல்கிறார்கள். அப்படி பேசிவிட்டால், ‘நீங்கள் அவரிடம் என்ன பேசினீர்கள்? இங்கு நடப்பதை ஏன் அங்கு சொல்கிறீர்களா என கேட்கிறார்கள்.
அங்கு பணியாற்றக்கூடிய அனைவருமே மாநாகராட்சி ஊழியர்கள் தான். அவர்களுக்கு ’ஹாய், குட்மார்னிங்’ சொல்வது எப்படி குற்றமாகும்?
”இது மனித உரிமை மீறல். லிப்ஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற அரசாங்க உத்தரவை எனக்கு காண்பியுங்கள்” என்று கேட்டு மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கருக்குப் பதிலளித்திருந்தேன்.
அதற்கு மறுநாள் எனக்கு மணலிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக ஆர்டர் வந்தது. உடனே அதை வாங்கிக்கொண்டு அங்கே இருந்து கிளம்பிவிட்டேன்.
அங்கே இருந்து வரும்போது மேயர் பிரியாவை பார்த்தேன். அவர், “நல்லா வேலை பாருங்கள்” என்றார். நானும், “உங்களிடம் வேலை பார்த்ததை பெருமையாக நினைக்கிறேன்” என கூறி கிளம்பிவிட்டேன்.
கடந்த ஒருமாதமாக மணலியில் தான் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு கொடுக்கப்பட்ட மெமோ எப்படி ஊடகங்களுக்கு வெளியானது என்று தெரியவில்லை.
என்னுடைய வேலையில் யாரும் குறை சொல்ல முடியாது. ஆணுக்கு இணையாக நானும் மதியம் 3 மணி வரை சாப்பிடாமல் நின்று வேலை செய்துள்ளேன். மழைகாலத்தில் கூட குடும்பத்தை விட்டுவிட்டு ரிப்பன் மாளிகையில் தங்கி பணி செய்துள்ளேன். இது ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி, மனித உரிமை மீறல்” என்று மாதவி தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கல்வி ஆலமரம்: காத்மண்டுவை திரும்பிப்பார்க்க வைத்த இந்திய பேராசிரியர்!