நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கலாம் என எனது இசைவை தெரிவித்தேன். அவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னதே நான் தான் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த 6ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா திமுக குறித்தும், உதயநிதி குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, திமுக குறித்து விமர்சித்தது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என விசிக தலைவர் திருமாவளவனிடம் தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனாவை பங்கேற்கலாம் என எனது இசைவை தெரிவித்தேன். அவரை அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சொன்னதே நான் தான். நீங்கள் பங்கேற்காத நிகழ்ச்சியில் நான் பங்கேற்கலாமா? என்று ஆதவ் அர்ஜூன் என்னிடம் கேட்டார். அதை உருவாக்கியதே நீங்கள் என்கிற போது, தவிர்க்க வேண்டாம் கலந்துகொள்ளுங்கள் என்று அவரிடம் சொன்னேன். அதே நேரத்தில், கவனமாக பேசுங்கள் என்று கூறியிருந்தேன்.
ஆகவே, அனுமதியில்லாமல் அவர் போகவில்லை. அந்த புத்தகத்தை உருவாக்கியதே அவர் தான் என்றபோது அவரை போக வேண்டாம் என்று சொல்வதில் ஜனநாயகம் இல்லை.
விசிக எளிய மக்களை அமைப்பாக்கி வருகிற ஒரு கட்சி. இதில் இத்தனை காலமும் நாங்கள் ஜனநாயகப்பூர்வமாக தான் எல்லா முடிவுகளையும் எடுத்திருக்கிறோம்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அணுகுமுறை உண்டு. ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் ஒரு பின்னணி உண்டு. மற்ற கட்சிகளைப் போல, விசிகவும் முடிவெடுக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள்.
விசிக தொடக்கத்தில் ஒரு தலித் இயக்கம் என்ற அடையாளத்தோடு பொதுப்பணியில் ஈடுபட்டது.
அரசியல் இயக்கமாக மாற நாங்கள் எடுத்த பல்வேறு முடிவுகளில் ஒன்று, இந்த இயக்கத்தில் தலித் அல்லாதவர்கள் ஜனநாயக சக்திகள் வந்து சேரலாம். சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இந்த கட்சியில் முக்கியமான பொறுப்புகளில் அங்கம் வகிக்க இடமுண்டு என்ற ஒரு தீர்மானமே 2007ஆம் ஆண்டு நிறைவேற்றினோம். அதை நாங்கள் வேளச்சேரி தீர்மானம் என்றே எங்கள் கட்சியில் அழைக்கிறோம். அப்போது புதிதாக எல்லோரும் பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம், என்று அறைகூவல் விட்டோம்.
அதில் இருந்து தலித் இல்லாத ஜனநாயக சக்திகளாக இருக்கிற புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளை, தந்தை பெரியாருடைய கொள்கைகளை, மாமேதை மார்க்ஸ் சிந்தனைகளை ஏற்றுக்கொன்டவர்கள் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள். அந்த வரிசையில் ஆதவ் அர்ஜூனும் ஒருவர்.
எங்கள் கட்சியில், துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு 10 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமைப்புச் செயலாளர் பொறுப்புக்கு 10 பேர் இருக்கிறார்கள். அதில் தலித் அல்லாதவர்களும் உண்டு. தலித் அல்லாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை இருந்தால் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவில் கலந்தாய்வு செய்து அவர்கள் மீதான நடவடிக்கைகளை ஒருமுறைக்கு இருமுறை பரிசீலித்து தான் எடுப்போம். இதை நாங்கள் ஒரு நடைமுறையாக கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், தலித் அல்லாதவர்கள் கட்சிக்குள் வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட்டுவிடக் கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது தலைமையின் கடமை.
இதுதொடர்பான துணை விதிகள் அப்படியே இருக்கிறது. துணைப் பொதுச்செயலாளர் என்கிற அளவிலான பொறுப்பு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிற போது, அதிலும் தலித் அல்லாதவர்கள் அந்த பொறுப்பில் இருந்து ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிற போது கட்சியின் மூத்த தலைவர்கள் கலாந்தாலோசித்து நடவடிக்கை எடுப்போம்.
திமுக, அதிமுக, பா.ஜ.கவில் இருப்பதை போல் நாங்கள் செயல்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பது ஏற்புடையது அல்ல. நாங்கள் பேசியிருக்கிறோம், முடிவை அறிவிக்கிறோம்” என்று திருமாவளவன் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவி பலாத்காரம் : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
ஆஸ்திரேலியாவின் அபார வெற்றியால் இந்தியா பின்னடைவு! மோசமான சாதனை பட்டியலில் ரோகித்