40 ஆண்டுகாலம் இருந்த கட்சியிலிருந்து நானாக வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்றும் மோடி நான் நினைத்தது போல் அல்ல. அவர் மனிதநேயம் மிக்கவர் என்றும் குலாம் நபி ஆசாத் பேசியுள்ளார்.
மனம் திறந்து பேச்சு
ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான குலாம் நபி ஆசாத், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சில தினங்களுக்கு முன் விலகினார்.
ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து அவர் சோனியாகாந்திக்கு எழுதிய கடிதம் நாடு முழுவதும் பேசு பொருளானது.
குலாம் நபி ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சி தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர் முதல்முறையாக டெல்லியில் செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டேன்
அதில் நான் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன். காங்கிரசில் உள்ள குறைகளை களையக் கோரி கடிதம் எழுதிய 23 பேரில் நானும் ஒருவன்.
அதிலிருந்தே அவர்கள் என்னை குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். தங்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ, கேள்வி கேட்பதையோ அவர்கள் ஒருபோதும் விரும்பவில்லை. பல (காங்கிரஸ்) கூட்டங்கள் நடந்தன.
ஆனால் அதில் ஒரு பரிந்துரை கூட நிறைவேற்றப்படவில்லை. கட்சிக்காக எனது வாழ்க்கையையே தியாகம் செய்துள்ளேன்.
காங்கிரசின் மோசமான நிலைப்பற்றி கடிதம் எழுதுவதற்கு முன்னும் பின்னும் 6 நாட்கள் தூங்காமல் இருந்தேன்.
ராகுலுக்கு ஆர்வமில்லை
30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தியின் குடும்பம் மீது எனக்கு இருந்த மரியாதை ராஜீவ்-சோனியா காந்தியின் மகனான ராகுல்காந்தி மீதும் இருந்தது.
தனிப்பட்ட முறையில், அவரது நீண்ட ஆயுளுக்காக நான் பிரார்த்திக்கிறேன். நாங்கள் அவரை வெற்றிகரமான தலைவராக மாற்ற முயற்சித்தோம். ஆனால் அதில் அவருக்கு ஆர்வம் இல்லை.
மோடியிடம் சிக்கியது ராகுல் தான்
எனது விலகலுக்கு பின்னால் பாஜக இருக்கிறது என்று விமர்சிக்கிறார்கள். புதியக்கட்சி தொடங்கி பாஜக உடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன.
ஆனால் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து ஆரத்தழுவியவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தான். “மோடியிடம் சிக்கியது நான் அல்ல, அவர்தான்”
மனிதநேயமிக்கவர் மோடி
பிரதமர் மோடியை ஒரு கசப்பான மனிதர் என்று நான் நினைத்தேன், அவருக்கு குடும்பம், குழந்தைகள் இல்லை. அவரால் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது என்று நினைத்திருந்தேன்.
ஆனால் உண்மையில் மோடி மனிதநேயம் மிக்கவர்” என்று குலாப் நபி ஆசாத் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
மூத்த தலைவர்கள் விமர்சனம்
காங்கிரசை விமர்சித்து கடிதம் எழுதிய 23 பேரில் கபில் சிபல், ஜிதின் பிரசாதா மற்றும் யோகானந்த் சாஸ்திரி ஆகியோருக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய நான்காவது தலைவர் குலாம் நபி ஆசாத் ஆவார்.
ஆசாத்துக்கு முன், ஒரு சில தலைவர்கள் மட்டுமே ராகுலை மோசமாக விமர்சித்து இருந்தனர். அதில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஹிமந்தா பிஸ்வா சர்மாவும் ஒருவர்.
கலை.ரா
ராகுலின் விளையாட்டே தோல்விகளுக்கு காரணம் : குலாம் நபி ஆசாத் கடும் தாக்கு!
மோடி மனித நேய மிக்கவறா… குஜராத் கலவரத்தை யாரால் மறக்க முடியும், மோடியால் இன படுகொலை நடக்கும் போது தூங்கினீரா…. யாருடைய நிர்பந்தம் உங்களுக்கு என்பது உங்களுக்கே புரியும்….மிருகத்தோடு மனிதனை ஒப்பிட கூடாது