அவதூறு வழக்கில் இன்று(மார்ச் 23) தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு ஆதரவாக தான் நிற்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது ”அதெப்படி திருடர்கள் அனைவருக்கும் பெயருக்குப் பின்னால் மோடி எனும் பெயர் உள்ளது?” என்று ராகுல்காந்தி பேசினார்.
அவரது பேச்சு தொடர்பாக குஜராத் மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விரைவில் ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
ராகுல்காந்திக்கு எதிரான இந்த தீர்ப்பைக் கண்டித்து காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அவர், ”ராகுல்ஜி, இந்த நேரத்தில் நான் உங்களுடன் நிற்கிறேன்! நீங்கள் அதிகளவில் சோதனையான நேரங்களையும், நியாயமற்ற தருணங்களையும் பார்த்திருக்கிறீர்கள்.
நமது நீதித்துறை அமைப்பு நீதி வழங்குவதில் உள்ள விதிமீறல்களை சரிசெய்யும் அளவுக்கு வலுவானது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டில் உங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா