புயல் பாதிப்பு குறித்து விடிய, விடிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் நிலைமையை கேட்டறிந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், சென்னையில் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.
இன்று(டிசம்பர் 10) காலை தென்சென்னைப்பகுதியில் ஆய்வு செய்த அவர், தற்போது வடசென்னையில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தென்காசி சுற்றுப்பயணம் சென்றுவிட்டு சென்னை திரும்பிய உடன் கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாகச் சென்று என்ன நிலைமை என்பதை ஆய்வு செய்தேன்.
புயல் எந்த மாவட்டத்தை தாக்கும், மழை எங்கு அதிகம் பெய்யும் என்பதை கேட்டறிந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொண்டேன்.
அதற்கு பிறகு விடிய விடிய ஒவ்வொரு ஆட்சித் தலைவரிடத்திலும், புயல் என்ன நிலைமை எப்படி இருக்கிறது என்று கேட்டு வந்தேன். குறிப்பாக மகாபலிபுரத்தில் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கிறது என்று அறிந்து அந்த மாவட்ட ஆட்சித் தலைவரிடத்தில் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை பேசினேன்.
இன்று காலை தென்சென்னை பகுதியில் கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினேன்.
அதனைத் தொடர்ந்து வடசென்னையில் காசிமேட்டுக்கு வந்திருக்கிறேன். மாண்டஸ் புயல் தாக்குதலில் இருந்து சென்னை மீண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு எடுத்த முயற்சியின் காரணமாகவும், அரசு ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாகவும் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர். குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவுக்கு சேதங்கள் இல்லை.
மரங்கள் விழுந்திருப்பதைக் கூட போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக உடனடியாக அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அந்தப் பணியை மாநகராட்சி ஊழியர்கள் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இரவென்றும், பகலென்றும் பாராமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், உள்ளாட்சி பிரநிதிநிதிகள், மேயர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
முதலமைச்சர் என்ற முறையிலும், அரசின் சார்பிலும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 24 மணி நேரத்தில் 37 மாவட்டத்தில் மழைப்பொழிவு ஏற்பட்ட நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது.
இவ்வளவு அதிகமான மழை பெய்திருந்தாலும் அதிக சேதம் ஏற்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது. கனமழை காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர், 98 கால்நடைகள் இறந்துள்ளன. 181 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நிவாரண முகாம்களில் 9301 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குபின் நிவாரணம் அறிவிக்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும்” என்றார்.
கலை.ரா