தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று (ஜனவரி 23) காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், சிறையில் இருக்கும் இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜி தவிர அனைத்து அமைச்சர்களும் கலந்துகொண்டார்கள்.
இதில் நிர்வாக ரீதியான ஆலோசனைகளுக்குப் பிறகு அமைச்சர்களிடம் கொஞ்ச நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அப்போது, “ எம்பி தேர்தலை விரைவில் எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்ன சொன்னோம், கடந்த சட்டமன்றத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தோம்…
அதில் மாவட்ட வாரியாக என்னென்ன திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம், இன்னும் எதை எதை நிறைவேற்றவில்லை என்பதை எல்லாம் நீங்கள்தான் கவனிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? நிறைவடைந்துவிட்டதா… இல்லை என்றால் ஏன்?
உங்கள் துறை, மாவட்டம், நீங்கள் பொறுப்பு அமைச்சராக இருக்கக் கூடிய மாவட்டங்களில் அரசின் நலத்திட்டங்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்திருக்கிறது., என்னென்ன சேரவில்லை… என்பதை ஆய்வு செய்து உடனடியாக எனக்கு ரிப்போர்ட் கொடுங்கள். முடிவடையாத திட்டங்களை முடிக்க உடனடியாக அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுங்கள். இதற்கு நீங்கதான் பொறுப்பு.
அதிகாரிகள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று என்னிடமே உங்களில் சிலர் சொல்லியிருக்கிறீர்கள். நானும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன்.
எனக்கு உடல் நிலை சரியில்லாத நிலையிலும் கூட என் சக்திக்கு மீறி எவ்வளவு உழைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும். நான் மனதளவில் சந்தோஷப்பட்டாலே என் உடல் நிலை நன்றாகிவிடும்.
இளைஞரணி மாநாடு முடிந்த அன்னிக்குதான் ரொம்ப நாள் கழிச்சு நன்றாக நிம்மதியாக தூங்கினேன். மாநாட்டுக்காக உழைச்ச உங்கள் எல்லாருக்கும் பாராட்டுகள்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குள் நாம் ஏற்கனவே அறிவித்த திட்டங்களை மாவட்ட வாரியாக நிறைவேற்றிட வேண்டும். அதில் கவனம் செலுத்துங்கள்” என்று கூறியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இதையடுத்து அமைச்சர்கள் உடனடியாக தத்தமது துறைகளின் திட்டங்களின் நிலை என்ன என்பது பற்றிய ஆய்வுக் கூட்டங்களை கூட்டத் தொடங்கிவிட்டார்கள்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முதல்வர் உத்தரவு : ராகுல் மீது வழக்குப்பதிவு!
டிஜிட்டல் திண்ணை: 27 ஆம் தேதி பொறுப்பு முதல்வர் ஆகிறார் உதயநிதி