வைஃபை ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் சில போட்டோக்கள் வந்து விழுந்தன. டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த திமுக மாசெக்கள் கூட்டத்தின் மேடைப் படங்கள்தான் அவை.
கூடவே, ‘இந்த மேடையில் அமைச்சரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி கலந்துகொள்ளவில்லை என்பதை கவனித்தீர்களா?’ என்ற ஒரு கேள்வியும் இடம்பெற்றிருந்தது.
அதற்கு பதிலளித்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “இந்த மாசெக்கள் கூட்டம் தொடர்பாக மின்னம்பலத்தில் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான செய்தியிலேயே… ’விருதுநகர் மாவட்ட அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேடையில் இருக்க வேண்டியவர்களில் முக்கியமானவரான துணைப் பொதுச் செயலாளர் ஐ. பெரியசாமி இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. டெல்லி சென்றிருப்பதால் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது’ என அந்த செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.
கட்சியின் மூத்த துணைப் பொதுச் செயலாளரான ஐ.பெரியசாமி மேடையில் இல்லாதது மாசெக்களிடமே ஒரு முணுமுணுப்பை ஏற்படுத்தியது என்றால்… அதேநேரம் மாசெக்கள் கூட்டத்தின் காட்சிகளை டிவிகளில் பார்த்த கட்சி நிர்வாகிகளிடையேயும் சலசலப்பை எழுப்பியது. ஏற்கனவே ஐ.பெரியசாமி தனது சீனியாரிட்டிக்கு ஏற்ற துறை தனக்கு கொடுக்கப்படவில்லை என்று வருத்தத்தில் இருந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த கூட்டுறவு வார விழாவில் கூட்டுறவுத் துறையின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை என்று நிதியமைச்சர் பிடிஆர் ஓப்பனாகவே மதுரையில் பேசினார். இது ஐபிக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இதுபோன்ற காரணங்களால் ஐ.பி. ஒருவேளை கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டாரோ என்ற கேள்விகள் அறிவாலயத்திலேயே எழுந்தன. ஆனால் இந்த காரணங்களால் அவர் மாசெக்கள் கூட்டத்துக்கு வராமல் இல்லை. மாசெக்கள் கூட்டத்தின் போது ஐ.பெரியசாமி டெல்லி சென்றதற்கு காரணம் அமலாக்கத்துறை வழக்குதான்.
2006-11 கலைஞர் ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தார் ஐ.பெரியசாமி. அதற்கு அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் ஐ.பெரியசாமி அமைச்சராக இருந்தபோது காவல்துறை அதிகாரி ஜாபர் சேட் மனைவி உள்ளிட்டோருக்கு முறைகேடாக காலிமனை ஒதுக்கினார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை மூலமாக வழக்குப் பதிவு செய்தார் ஜெயலலிதா. இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று நினைத்திருந்த ஐ.பெரியசாமிக்கு இப்போது இவ்வழக்குதான் தலைவலியாக மாறியிருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கினை அடிப்படையாக வைத்து ஐ,பெரியசாமி மீது அமலாக்கத்துறையும் வழக்குத் தொடுத்தது. இந்த வீட்டுமனை ஒதுக்கீடு மூலமாக சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக வழக்குத் தொடுத்த அமலாக்கத்துறை இந்த விவகாரத்தில் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ஜாபர் சேட்டின் மனைவி, கலைஞரின் முன்னாள் நேர்முக உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளையும் முடக்கியது.
இதற்கிடையே ஜூலை 27 ஆம் தேதி சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அன்று காலை பத்தரை மணி முதல் இரவு ஒன்பதரை வரை விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அப்போதே வருத்தத்தில் இருந்தார் ஐ.பெரியசாமி.
சட்ட ரீ தியான முயற்சியாக தன் மீது அமலாக்கத்துறை பதிந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தள்ளுபடி செய்தார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
அந்த மனு மீதான விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்திருக்கிறது. அந்த வழக்கு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைக்காகத்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட கலந்துகொள்ளாமல் டிசம்பர் 1 ஆம் தேதி டெல்லியில் முகாமிட்டிருக்கிறார் அமைச்சரும் திமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி.
இதுபற்றி திண்டுக்கல் அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘வீட்டு வசதித் துறை சார்பில் முதல்வர் கோட்டா என்ற அடிப்படையில் முதல்வர்களின் விருப்பத்துக்கு இணங்க வீட்டு மனைகள் ஒதுக்கப்படுவது காமராஜர் முதல்வராக இருந்தபோதிலிருந்தே வழக்கத்தில் இருக்கிறது.
அதன்படி அப்போதைய முதல்வர் கலைஞரின் விருப்பத்தைதான் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி சட்ட விதிகளின்படி செய்தார். இந்த ஒதுக்கீடு நடந்தபோது வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த செல்லமுத்து அதிமுக ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை தன்னிடம் விசாரணை நடத்தியபோது, ‘அமைச்சர் பெரியசாமி சொன்னதால்தான் இந்த கோப்பில் கையெழுத்திட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் ஒரு செயலாளர் இப்படி சொல்வதை சட்ட ரீதியாக ஏற்க முடியாது. ஒரு வேளை அப்போது அமைச்சராக இருந்த பெரியசாமி சொல்லித்தான் இந்த ஒதுக்கீட்டுக் கோப்பில் செயலாளர் கையெழுத்திட்டிருந்தார் என்றால், அதை கோப்பில் எழுதியிருக்க வேண்டும்.
ஆனால் செல்லமுத்து அந்த ஃபைலில் அப்படி ஏதும் எழுதவில்லை. எனவே அப்போதைய அதிமுக ஆட்சியின் நிர்பந்தத்தால் அப்படி சொல்லியிருக்கலாம். எனவே இந்த வழக்கை ஐ.பெரியசாமி முறியடித்துவிடுவார்’ என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
மேலும், ‘என்னதான் வழக்கின் மீது நம்பிக்கை இருந்தாலும் திமுக தலைமையிடம் இருந்து தனக்கு போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதே ஐ.பெரியசாமியின் வருத்தமாக இருக்கிறது. அமலாக்கத்துறை வழக்குகள், விசாரணை மூலம் பெரியசாமிக்கு நெருக்கடி கொடுக்க பாஜக முயல்கிறது. ஆனால் பெரியசாமி மற்றவர்களை போல அவ்வளவு வீக் ஆனவர் இல்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அழையா விருந்தாளி: மாணவனுக்கு நேர்ந்த கொடுமை!
ஷாக் கொடுத்த குஜராத் மக்கள்: வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?