ராஜ்பவனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன்: ஸ்டாலின்

அரசியல்

திருச்சியில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ராஜ்பவனில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன் என கூறினார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுக மற்றும் கூட்டணி  கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சார கூட்டம்  இன்று (மார்ச் 22) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முதலில் திருச்சி தொகுதி வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கேட்டு பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும் போது மேடையில் இருந்த திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துரை வைகோவிடம் சுருக்கமாக பேசுமாறு கூறினார்.

அதற்கு துரை வைகோ, ”நானே கத்துக்குட்டி, அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகள் தான் ஆகிறது. முதலமைச்சர் முன்பு முதல்முறை பேசுகிறேன். ஏதாவது 2 வார்த்தைகள் சொன்னால் அவர் பாராட்டமாட்டாரா என நினைத்து கொண்டிருக்கிறேன். 2 அல்லது 3 நிமிடத்தில் முடித்துவிடுகிறேன்” என தொடர்ந்து பேசினார்.

அவர் பேசி முடித்ததும் ஓட்டு போட சொல்லி ஆதரவு கேளுங்கள் என்று கே.என்.நேரு, கூற, “ஓட்டு கேட்க மறந்துட்டனு அண்ணா சொல்றாங்க… முதல்வர் செய்ததை செய்ய போறதை சொல்லியிருக்கிறேன். அதை சொன்னாலே மக்கள் ஓட்டுப்போட்டுவிடுவார்கள்” என பதிலளித்தார்.

தொடர்ந்து பெரம்பலூர் வேட்பாளரும், கே.என்.நேரு மகனுமான அருண் நேரு, ஓட்டுப்போடச் சொல்லி ஆதரவு கேட்டு பேசினார்.

இதையடுத்து திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் திமுக, மதிமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு பிரச்சார உரையை தொடங்கினார்.

அவர் பேசுகையில், “திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப்பாதை.  திருச்சி என்றால் திருப்புமுனைதான். அதனால் தான் திமுகவுக்கு 6 முறை ஆட்சிப்பொறுப்பை தமிழ்நாட்டு மக்கள் வழங்கியிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணி ஆட்சியை ஒன்றியத்தில் அமைப்பதற்கான தேர்தல்தான் இந்த மக்களவைத் தேர்தல்” என்றார்.

ராஜ்பவனில் இருந்து தேர்தல் பிரச்சாரம்…

“நம் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க ஆளுநரை வைத்து மிரட்டி பார்க்கிறார்கள், இந்த நிகழ்ச்சிக்கு புறப்படுவதற்கு முன்னால், அமைச்சர் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துவிட்டுதான் வந்திருக்கிறேன்.

ஆளுநர் அவராக பண்ணிவைத்தாரா? முடியாது என சொல்லிவிட்டார். நாங்கள் விடுவோமா… திமுககாரர்கள் நாங்கள்…

உச்ச நீதிமன்றத்துக்கு போனோம். நேற்று வாதம் நடந்தது. தலைமை நீதிபதி ஆளுநருக்கு எப்படிப்பட்ட கண்டனம் தெரிவித்தார்.

அதன்பிறகு ஆளுநர் இன்று 3.30 மணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அங்கு சென்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டு, ஒரு மரியாதைக்கு பொக்கே ஒன்று அவரிடம் கொடுத்தேன்.

அவரிடம் புறப்படும்போது சொன்னேன், இன்றுதான் தேர்தல் வேலையை தொடங்குகிறேன். முதன்முதலாக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்குகிறேன் என்று சொன்னேன். அவர் பெஸ்ட் ஆஃப் லக் என்று சொல்லி அனுப்பினார்.

ராஜ்பவனில் இருந்து தொடங்கிய இந்த பயணம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு போகப்போகிறது என்பதற்கு இதுஒரு அடையாளம்.

மக்களுக்கான சட்டங்களை நாம் இயற்றினால், அதற்கு ஒப்புதல் தர மறுக்கிறார். அதற்கு நாம் ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்கு போகவேண்டும்.
வரலாற்றில் வேறு எந்த ஆளுநரையாவது இப்படி நீதிமன்றம் கேள்விகளை கேட்டிருக்கிறதா?”  என குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெறுப்பு பேச்சு… மத்திய அமைச்சர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

CSK vs RCB: இளம்புயல்களை ‘களமிறக்கிய’ சென்னை… வெற்றிக்கனி யாருக்கு

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *