தனக்கு தொடர்புடைய இடத்தில் பணம் கைப்பற்றப்படவில்லை என்றும், தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அரசியல் கட்சியை சேர்ந்த சிலர் சென்னை எழும்பூரில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் வாக்காளார்களுக்கு கொடுப்பதற்காக பணம் கொண்டு செல்வதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று (ஏப்ரல் 6) இரவு ரகசிய தகவல் கிடைத்தது.
நெல்லை ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்!
இதனையடுத்து இரவு 8.35 மணியளவில் தாம்பரம் வந்த ரயிலில் அதிரடி சோதனையிட்ட தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள், நெல்லை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமான பெருமாள், சதிஷ், நவீன் என்ற 3 பயணிகள் சூட்கேஸ்களில் கட்டுக்கட்டாக பணம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் 4 கோடி பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ப்ளூ டைமண்ட் ஹோட்டல் மற்றும் சாலிகிராமத்தில் உள்ள அவரது உறவினர் முருகன் ஆகியோரது வீடுகளில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை!
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “”தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிக்கப்பட்ட 4 கோடி ரூபாய்க்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனக்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எங்கேயும் பணம் பிடிபட்டதாக தெரியவில்லை.
திருநெல்வேலியை பொறுத்தவரை பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் என் பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்று ஆளும்கட்சி திமுக என்னை டார்கெட் செய்கிறது. எனக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மறைமுகமாக எடுத்து நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் யாருடைய பணமோ பிடிபட்டதற்கு, அது என்னுடைய பணமில்லை என்று நான் எப்படி தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கோடை விடுமுறை : கூடுதல் ஏசி பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்!
இந்த 4 டீமும் ‘என்னோட’ பேவரைட்… பிரபல நடிகரால் ‘ஷாக்கான’ ரசிகர்கள்!