அதானி என்னை வந்து சந்திக்கவில்லை என்றும் நானும் அவரை பார்க்கவில்லை என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (டிசம்பர் 10) இரண்டாவது நாளாக கூடியது.
அப்போது, அதானி முறைகேடு விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய பெயரும் அடிபடுவதாக பாமக சட்டமன்ற கட்சித் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜி.கே மணி கூறினார்.
இதற்கு பதிலளித்து எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “ ஜி.கே.மணி உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்கள் இந்த அவையில் மட்டுமல்ல வெளியிலும் இதுபற்றி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
வெளியில் பேசிய அனைத்தையும் அவர் அவையில் பதிவு செய்யவில்லை. அதானியோடு முதலமைச்சருக்கு தொடர்பு இருக்கிறது… அதானி வந்து முதலமைச்சரை சந்தித்துவிட்டு சென்றார் என்று சொல்வார் என்றும் எதிர்பார்த்தேன்.
ஆனால் பேசவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. அவருக்கு உண்மை தெரிந்திருக்கும் என்பதால் விட்டுவிட்டார் என்று கருதுகிறேன்.
தமிழ்நாட்டில் அதானியின் தொழில் முதலீடுகள் குறித்து பொதுவெளியில் வரும் தவறான தகவல்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவான விளக்கத்தை இரண்டு மூன்று முறை கூறியிருக்கிறார்.
இருந்தாலும் இதைப்பற்றி செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கிறது.
அதானி குழுமத்தின் முறைகேடுகளை வைத்து தமிழக அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைப்பவர்களுக்கு, நான் எழுப்பக் கூடிய கேள்வி என்னவென்றால், ‘அதானி மீது சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும். அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
திமுக மீது குற்றம்சாட்டும் பாமகவோ, பாஜகவோ இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க தயாராக இருக்கிறதா?” என்ற கேள்வி எழுப்பினார்.
முதல்வரின் பதிலை தொடர்ந்து பாமக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக நமது மின்னம்பலத்தில் “அதானியுடன் சந்திப்பா? சட்டமன்றத்தில் புயல்… பதிலடிக்குத் தயாராகும் ஸ்டாலின்” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி டிஜிட்டல் திண்ணை வெளியிட்டிருந்தோம்.
அதில், டிசம்பர் 9 ஆம் தேதி கூடும் சட்டமன்றத்தில் அதானி விவகாரத்தை எழுப்ப பாமக தயாராகி வருகிறது, இதற்கு முதல்வர் ஸ்டாலினும் பதிலளிக்க தயாராக இருக்கிறார் என்று கூறியிருந்தோம்.
அந்தவகையில் பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, அதானி விவகாரம் குறித்து பேச அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார். “தமிழ்நாட்டுக்கும் அதானி விவகாரத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை. அவரும் என்னை வந்து சந்திக்கவில்லை. நானும் அவரை பார்க்கவில்லை. இதைவிட வேறு விளக்கம் தேவையா? நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று காட்டமாக தெரிவித்தார் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஆதவ் அர்ஜுனா விசிகவில் இருந்து விலகினாரா?
ஜாமீன் கிடைத்தும் சிறையில் கைதிகள் : நீதிமன்றம் முக்கிய உத்தரவு!