எனக்கு ஆட்சேபனை இல்லை… எடப்பாடிக்கு எதிரான வழக்கில் தயாநிதிமாறன் பதில்!

அரசியல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது மத்திய சென்னை தொகுதியில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது மத்திய சென்னை எம்.பியான தயாநிதி மாறன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 75 சதவிகிதம் செலவு செய்யவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

இந்நிலையில் தன் மீது ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றசாட்டை எடப்பாடி முன் வைத்துள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எச்சரித்திருந்த தயாநிதி மாறன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது எடப்பாடி பழனிசாமி ஆஜரானார்.

அப்போது எடப்பாடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இன்பதுரை, “பத்திரிக்கைகளில் செய்தி வந்ததன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி தயாநிதிமாறன் குறித்த கருத்து தெரிவித்தார். இதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் இன்று (செப்டம்பர் 19) விசாரணைக்கு வந்தபோது, தயாநிதிமாறன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், “வயது மூப்பு(70) மற்றும் மருத்துவ காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவரது கோரிக்கை நியாயமானது என்று நீதிமன்றம் கருதினால், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி வரும் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

குவார்ட்டர் ரூ.99… ஆந்திராவில் அதிரடி மதுக்கொள்கை!

”ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த முடியாது”: ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *