பெண்களால் 13 ஆண்டுகளாக வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டதாக கூறி நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் கொடுத்திருந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வளசரவாக்கம் காவல் நிலையம் சீமானை விசாரணைக்கு ஆஜராக கூறி சம்மன் அனுப்பியது.
ஆனால் சீமான் ஆஜராவதற்குள்ளேயே விஜயலட்சுமி வழக்கை வாபஸ் பெற்று கொண்டார். இந்நிலையில் இன்று (செப்டம்பர் 18) வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மனைவியுடன் வந்து ஆஜரானார் சீமான்.
காவல் நிலையத்திற்குள் சென்று வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த சீமான், “விஜயலட்சுமி ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு வழக்கை திரும்ப பெற்றிருந்தார். தற்போது மீண்டும் 2வது முறையாக வழக்கை திரும்ப பெற்றுள்ளார்கள்.
2011-ல் இந்த வழக்கு திமுக காங்கிரஸ் தூண்டுதலில் தான் போடப்பட்டது. புகார்கள் தான் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. ஆனால் வழக்கில் உண்மைத் தன்மை இல்லாததால் நிலைக்கவில்லை. 128 வழக்குகள் என் மீது உள்ளன. அது எல்லாம் மக்களுக்காக போராடி சிறை சென்றதற்காக போடப்பட்ட வழக்குகள். அந்த வழக்குகள் மூலம் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதால் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளனர்.
பெண்கள் சம்பந்தப்பட்டது என்பதால் என்னை அசிங்கப்படுத்தி விடலாம், மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தி விடலாம், என்னுடைய மதிப்பை சிதைத்து விடலாம் என்ற நோக்கத்தில் செய்யப்பட்டது.
தற்போது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் எல்லாம் முதலில் கொடுத்த புகாரில் இல்லை. முதலில் திருமணமானது, பணம் கொடுத்தது, நகை கொடுத்தது என்று எதையுமே சொல்லாமல் தற்போது புதிது புதிதாக அவதூறு பரப்புவதற்காக சொல்கிறார்கள்.
பெண்களால் 13 ஆண்டுகளாக நான் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளேன். குற்றத்தின் உண்மைத் தன்மையை இன்று விசாரிக்காமல் அன்றைக்கே விசாரித்திருக்க வேண்டும். திரும்ப பெற்ற வழக்கிற்கு மீண்டும் உயிர் கொடுத்தது ஓவர் பில்டப்பாக உள்ளது. ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் சேர்ந்து நின்று கொண்டு ஒருத்தனை வன்கொடுமை செய்ததை விட கொடுமை உள்ளதா இந்த உலகத்தில். இந்த சமூகத்தின் முன்பு நான் அவமானப்படுவதை அசிங்கப்படுவதை ரசிக்கிறீர்கள்.
விஜயலட்சுமி வழக்கை நான் முடித்து வைப்பேன். என் மீது சொன்ன குற்றச்சாட்டுகளை எல்லாம் நீதிமன்றத்தில் வந்து சொல்ல வேண்டும். 8 முறை கருக்கலைத்தேன் என்று சொல்வதெல்லாம் என்பது நகைச்சுவை. அதற்கெல்லாம் ஒரு சான்று இருக்க வேண்டும்.
திருமணமானதாக இருந்தால் ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியதுதானே. சும்மா வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டு போனால் அதை சகித்துக் கொண்டு போவதா? நான் மௌனமாக இருந்த போது நீங்கள் அதிகமாகப் பேசிவிட்டீர்கள். ஒரே ஒரு முறை என் முகத்திற்கு முன்னால் வந்து சொல்லாமல் ஏன் ஓடிப்போனீர்கள்.
இந்த வழக்கை தொடர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொல்பவர்கள் பேசுவதற்கு முன்பு யோசித்திருக்க வேண்டும்.
வீரலட்சுமிக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது. பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது காவல் நிலையத்தில் சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
புகாரை வாபஸ் பெற்ற பிறகு நான் ஆஜராகவில்லை. நான் ஆஜராவதாக எழுதிக் கொடுத்த பிறகுதான் அவர்கள் வழக்கை திரும்ப பெற்றுள்ளார்கள்.
விஜயலட்சுமி வீரலட்சுமிக்கு பின்னால் இருந்து செயல்பட்டது யார் என்று வெளிப்படையாகவே சொல்கிறேன். திமுகவிற்கு தெரியாமல் இது எதுவும் நடக்கவில்லை.
அவர்களை அழைத்து வந்தது யார்?, காருக்கு வாடகை கொடுத்தது, தங்க வைத்தது யார்? இதற்கெல்லாம் என்ன அவசியம் இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக வழக்கை தூசி தட்டி எழுப்பாமல் என்ன செய்தீர்கள். தேர்தல் வரும் போது வழக்கை தொட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
மோனிஷா
அப்போ ’லவ் டுடே’… இப்போ ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’
காவல் நிலையத்தில் மனைவியுடன் ஆஜரான சீமான்