விமர்சனங்களால் வளர்ந்தவன் நான் : கோவையில் முதலமைச்சர் ஆவேசப் பேச்சு!

அரசியல்

சொந்தக் கட்சியில் நடக்கும் அதிகாரப் போட்டியில் தங்கள் கையாலாகாத தனத்தை மறைக்க, திசை திருப்பத் தான் திமுகவை விமர்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியிருக்கிறார்.

1,07,410  பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கோவையில் ரூ. 271 கோடி மதிப்பில் 228 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ. 663 கோடி மதிப்பில் 748 திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

இத்துடன் அனைத்து துறைகளின் வாயிலாக ரூ.589.24 கோடி மதிப்பில் 1,07,410  பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “நாட்டிலேயே அதிக முதலீடுகளை ஈர்த்து, அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, தொழில் முனைவோர்களை ஊக்குவித்து கல்வி,

பொருளாதாரம், சமூக நலத்திட்டங்கள் என அனைத்திலும் கடந்த ஓராண்டில் வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது.

தன்மானம் இல்லாதவர்கள் விமர்சிக்கிறார்கள்

இந்த வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் திமுக அரசு எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்கள் மக்களோடு மக்களாக நின்று கேள்வி கேட்கவேண்டும். வெறும் பேட்டி கொடுப்பதற்காக பேசிவிட்டு ஓடி ஒளிந்துக் கொள்ளக்கூடாது.

தன்மானம் இல்லாத இனம் மானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் திமுக அரசை விமர்சிக்கின்றது. அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

மக்கள் பாராட்டு போதும்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு , வாக்களித்த வாக்களிக்காத அனைத்து மக்களுக்குமான அரசாங்கம் திமுக அரசாங்கம்.

சிலர் காழ்ப்புணர்ச்சியோடு வேண்டுமென்றே என்னை தூற்றி வருகின்றனர். யாருடைய பாராட்டும் எனக்குத் தேவையில்லை.

அரசின் திட்டங்களால் பயனடைந்து வரும் மக்களின் பாராட்டே எனக்கு போதுமானது.

விமர்சனங்களால் வளர்ந்தவன்

திமுகவின் கொள்கைகளும், கோட்பாடுகளும் நிறைவேறிவிடக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் என்னை விமர்சிக்கிறார்கள்.

அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் நான் விமர்சனங்களாலே வளர்ந்தவன். எதிர்ப்பையும், அடக்குமுறைகளையும் மீறி வளர்ந்தவன்.

யாராவது என்னை எதிர்த்தால் தான் மேலும் மேலும் உற்சாகமாக செயல்படுவேன். அதே சமயம், விமர்சனம் என்ற பெயரில் தமிழகத்தின்  வளர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தால் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.

ஓராயிரம் திட்டங்கள் நிறைவேற்றம்

சொந்தக் கட்சியில் நடக்கக்கூடிய அதிகாரப் போட்டியில் தங்களது கையாலாகாத தனத்தை மறைப்பதற்கு, திசை திருப்புவதற்கு தான் திமுகவை விமர்சித்து வருகின்றனர்.

திமுக அரசை விமர்சிப்பதற்கு அவர்களுக்கு துளியளவு தகுதி கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் ஒராண்டில் ஓராயிரம் திட்டங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம்,

ஐந்தாண்டு வருடங்களில் அளப்பறிய திட்டங்களை தந்து உலகில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே எங்கள் லட்சியம் அதனை அறிவிக்க கூடிய மாநாடு இந்த மாநாடு” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கலை.ரா

டிஜிட்டல் திண்ணை: 15 மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- ஸ்டாலின் கையில் ‘ரெட்’ லிஸ்ட்!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *