”மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் பேசவில்லை” : உதயநிதி ஸ்டாலின்

Published On:

| By christopher

”மத்திய அரசுக்கு நாம் அளித்த வரியில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியை கேட்கிறோம். அதில் மரியாதை குறைவாக எந்த வார்த்தையும் நான் பயன்படுத்தவில்லை” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பினை அடுத்து முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நிவாரண நிதியை கோரியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய அவர், ”மத்திய அரசின் நிதியை ’அவங்க அப்பன் வீட்டு பணத்தையா கேட்கிறோம்’ என்று கூறியுள்ளார். இந்த பேச்சு எல்லாம் அரசியலில் நல்லது இல்லை. அவருடைய தாத்தா எப்பேற்பட்ட தமிழ் அறிஞர். பதவிக்கு ஏற்றளவுக்கு வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்” என நிர்மலா சீதாராமன்  பேசினார்.

இந்தநிலையில் இன்று (டிசம்பர் 23) காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.125.50 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் கலந்துகொண்டார்.

தமிழ்நாட்டுக்கான நிதியைத் தான் கேட்கிறோம்!

பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்தார். அவர், ”மத்திய அரசிடம் வெள்ள நிவாரண நிதி கேட்பதில் மரியாதை குறைவான எந்த வார்த்தையும் நான் பயன்படுத்தவில்லை.  மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “கேட்டதும் கொடுப்பதற்கு ஏடிஎம் ஒன்றும் கிடையாது” என்று பேசியதற்கு தான், ”நாங்கள் என்ன அவர்கள் அப்பா வீட்டு காசையா கேட்கிறோம். மக்கள் கொடுத்த வரிப் பணத்தைத் தானே கேட்கிறோம்” என்று கூறியிருந்தேன்.

முன்னதாக ஒன்றிய குழு சென்னைக்கு வந்து வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டு, பாதிப்புகள் மிக பெரியது என்று கூறி, வெள்ள நிவாரண பணிகள் மேற்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பை பேரிடராக ஒப்புக்கொள்ள மத்திய அரசு மறுக்கிறது. தமிழ்நாடு மக்கள் இதனை புரிந்துகொள்ளவேண்டும்.

சென்னையில் பாதிப்பு ஏற்பட்ட போதும், நெல்லை, தூத்துக்குடியில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட போதும் முதல்வர் முதல் அனைத்து அமைச்சர்கள், திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து களப்பணியாற்றி வருகிறார்கள்.

மத்திய அரசுக்கு நாம் அளித்த வரியில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியைத் தான் கேட்கிறோம். தற்போது மீண்டும் ஒருமுறை மத்திய அரசிடம் தமிழ்நாட்டுக்கு நிதி அளிக்கக்கோரி  மரியாதையாகவே கேட்கிறேன்.” என்று உதயநிதி தெரிவித்தார்.

ஏரல் பகுதியில் அதிக பாதிப்பு!

தொடர்ந்து ”நெல்லை தூத்துக்குடியில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் காயல்பட்டணத்தில் அதிக மழை பெய்த போதிலும், ஏரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தேன். அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் அங்கு முகாமிட்டு தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் அப்பகுதிக்கு நான் செல்ல இருக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வெள்ள பாதிப்பு எதிரொலி: வட்டாட்சியர் அதிரடி மாற்றம்!

‘மீண்டும் அமைச்சராவீர்கள்’ : பொன்முடிக்கு அழகிரி தந்த நம்பிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel