கோவில்பட்டியில் பாஜகவினர் எடப்பாடியின் உருவப்படம் எரித்தது தனக்கு தெரியாது என்றும், தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 07) தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களில் தமிழக அரசியல் களத்தில் ஒரே கூட்டணியில் இருக்கும் அதிமுக பாஜக இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக பாஜக ஐடி பிரிவு மாநில நிர்வாகிகளான நிர்மல்குமார், திலீப் கண்ணன் மற்றும் சிலர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இதனையடுத்து கூட்டணி தர்மத்தை மீறிவிட்டதாக பாஜக அதிமுகவினரிடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
நேற்று பாஜகவை சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடியை கடுமையாக சாடிய நிலையில், அக்கட்சி தலைவர் அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கு எதிர்வினை உண்டு என்று செய்தியாளர்கள் சந்திப்பில் எச்சரிக்கை விடுத்தார்.
அதன்தொடர்ச்சியாக கோவில்பட்டியில் பாஜக இளைஞரணியினர் எடப்பாடியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அதிமுக தரப்பினரும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் இருந்து தேனி பெரியகுளம் வந்த அண்ணாமலை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு சமீபத்தில் மறைந்த பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாளின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் அருகே அமர்ந்து ஆறுதல் கூறினார்.
பின்னர் வெளியே வந்த அண்ணாமலையிடம் கோவில்பட்டியில் எடப்பாடியின் உருவப்படம் பாஜகவினர் எரித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அண்ணாமலை, “இந்த சம்பவம் நடந்தது எனக்கு தெரியாது. நான் மதுரை விமான நிலையத்தில் இருந்து தேனிக்கு நேராக வந்துவிட்டேன்.
கூட்டணித் தலைவர்களை அவமதித்து இதுபோன்று செய்யக்கூடாது என்று முன்னரே நான் தெரிவித்து இருந்தேன். இந்த சம்பவம் நடந்தது தவறு. பாஜக தொண்டர்கள் யாரும் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.
கூட்டணி தலைவர்களுக்கு தார்மீக அடிப்படையில் நாம் மரியாதை கொடுக்க வேண்டும். சிலர் யூடியுபில், ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளதை பார்க்கிறேன். அப்படி யாரும் செய்ய வேண்டாம். கட்சியின் கொள்கையின் அடிப்படையில் தொண்டர்கள் செயல்படவேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
எடப்பாடியின் உருவப்படம் எரிப்பு: பாஜகவினர் கைது!
தமிழ்நாட்டில் வெற்றிபெற பாஜகவுக்கு தான் தயவு தேவை: அதிமுக விமர்சனம்