i denied if i get the Bharat Ratna Award

”பாரத ரத்னா விருது கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” : ராமதாஸ்

அரசியல்

ராமதாஸ்க்கு பாரத ரத்னா விருது வழங்காதது குறித்து அன்புமணி வருத்தம் கூறிய நிலையில், பாரத ரத்னா உட்பட எந்த விருது கொடுத்தாலும் நான் மறுத்துவிடுவேன் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள இராணி மெய்யம்மை அரங்கத்தில் இன்று (பிப்ரவரி 1) காலை 11 மணிக்கு தொடங்கியது.

Image

எனக்கு பெரிய வருத்தம் உள்ளது!

கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “மத்திய அரசு சமீபத்தில் பாரத் ரத்னா விருதை வழங்கினார்கள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் விருது வழங்கினார்கள்.

இந்தியாவின் முதன்மை விருது பாரத் ரத்னா. அதை சமூக போராளி பிகாரின் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு  வழங்கினார்கள்.

மிக்க மகிழ்ச்சி. அவர் அந்த விருதுக்கு தகுதியானவர். நிச்சயமாக அவருக்கு வழங்க வேண்டும். ஆனால் எனக்கு பெரிய வருத்தம்.

தனது 85 வயதிலும் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எவ்வளவோ சாதனைகள் செய்த, நம்முடைய மருத்துவர் ராமதாஸ்க்கு ஏன் பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்ற வருத்தம் உள்ளது.

கர்பூரி தாகூர் முடிதிருத்துகிற சமுதாயத்தைச் சேர்ந்தவர். பிகாரில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார். முதலமைச்சராக இருந்து அதிகாரத்தில் சாதனைகள் செய்வது பெரிய விஷயம் கிடையாது.

ஆனால் எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் சாதனை செய்வதுதான் உயர்ந்த சாதனை.

இந்தியாவில் 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்த ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ் தான். தமிழ்நாட்டில் 4, இந்திய அளவில் 2 இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர்.” என்று அன்புமணி பேசினார்.

Image

நான் அதை மறுப்பேன்!

தொடர்ந்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “எனக்கு பாரத ரத்னா விருது கொடுத்தாலும், வேறு எந்த விருது கொடுத்தாலும், நான் அதை வாங்க மறுப்பேன்.

அதை விட சிறந்த விருது, பாமக சொந்தங்களின் மனதில் நான் வாழ்வது தான். கூட்டணி குறித்து சரியான முடிவெடுப்போம், பாமகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன்” என்று ராமதாஸ் பேசினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

Video : ரோட்டர்டாமில் ’விடுதலை’- க்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!

ஹேமந்த் சோரன் கைது: ஸ்டாலின் ரியாக்‌ஷன்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0