”சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்கு, அவரை தெய்வமாக போற்றும் அனைவரிடமும் நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலையை கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் கடந்த 26ஆம் தேதி அடித்த சூறாவளி காற்று மற்றும் கனமழை காரணமாக சிவாஜி சிலை சுக்குநூறாக உடைந்து விழுந்தது.
சிலை வைக்கப்பட்டு 9 மாதங்களுக்குள் இந்த விபத்து நடந்தது அம்மாநில மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும், ஆளும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் இன்று நடந்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ”எனக்கும், எனது சகாக்களுக்கும் சத்ரபதி சிவாஜி என்பது வெறும் பெயர் அல்ல. அவர் ஒரு தெய்வம். எங்களுக்கு சத்ரபதி சிவாஜியை விட பெரியது எதுவுமில்லை. இன்று நான் எனது தெய்வம் சத்ரபதி சிவாஜி முன் பணிந்து மன்னிப்பு கேட்கிறேன்.
கடந்த 2013-ம் ஆண்டு பாஜக என்னை பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்தபோது, நான் செய்த முதல் வேலையாக ராய்காட் கோட்டைக்குச் சென்று சத்ரபதி சிவாஜி சமாதியில் ஒரு பக்தன் தனது இறைவனிடம் பிரார்த்தனை செய்வது போல பிரார்த்தனை செய்தேன்.
சத்ரபதி சிவாஜியை தெய்வமாகப் போற்றிய அனைவரிடமும் நான் தலைவணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று மோடி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இறுதியில் மஹராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிவாஜி சிலை உடைந்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டுள்ளது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
யோகிபாபுவிடம் அப்படி நடந்தாரா அஜித்? – உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர்
பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன்… உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு!
Comments are closed.