தனது வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக திருச்சி சிவா எம்.பி.தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று (மார்ச் 15) நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆதரவாளர்களுக்கும், திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நேற்று திருச்சி சிவா எம்.பி. வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் 4 பேரை கட்சியிலிருந்து நேற்று இடை நீக்கம் செய்தார்.
இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை திருச்சி சிவா இன்று (மார்ச் 16) பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தாக்குதல் குறித்து நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை.
கடந்த காலத்திலும் நிறையச் சோதனைகளைச் சந்தித்திருக்கிறேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட எனக்குக் கட்சி முக்கியம். அதனால் பலவற்றை நான் பெரிது படுத்தியதும் இல்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை.
தனிமனிதனை விட இயக்கம்தான் பெரியது என்ற தத்துவத்தின் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்த நிகழ்வு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாத போது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். 60 வயதானவர்கள் எல்லாம் காயமடைந்திருக்கிறார்கள்.
அதனால் நான் இப்போது பேசும் மன நிலையில் இல்லை. மிகுந்த மனச்சோர்வில் இருக்கிறேன். என்னுடைய வீட்டில் வயதான மூதாட்டி வேலை பார்க்கிறார். என்னுடைய நண்பர்களான சில சீனியர் சிட்டிசன்ஸ் பாதிக்கப்பட்டுள்ளனர். நான் எல்லாமே சொல்கிறேன். தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்” என்றார்.
பிரியா
ஈவிகேஸ் இளங்கோவன் உடல்நிலை: மருத்துவர் பேட்டி!
ஓபிஎஸ் ஆதரவாளர் வழக்கு: ஈபிஎஸ் பதில்!