எனக்கு 82 அல்லது 92 வயதாக இருந்தாலும், நான் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் என்று தன்னை விமர்சித்த அஜித்பவாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சரத்பவார்.
மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஜித் பவார், ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றார். அவருடன் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உள்பட 8 என்.சி.பி. எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
இதனையடுத்து சரத்பவாரும், அஜித் பவாரும் தங்களது தரப்பின் உண்மையான பலத்தை நிரூபிக்க மும்பையில் தனித்தனியாக நேற்று கூட்டம் நடத்தினர்.
பாந்த்ராவில் நடந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் இடையே ”தான் பல ஆண்டுகள் துணை முதல்வராகவே காலம் கடத்திவிட்டதாகவும், சரத்பவாரின் தவறான முடிவால் 2014ஆம் ஆண்டு மகாராஷ்டிரா முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்பை என்சிபி தவறவிட்டதாகவும் அஜித் பவார் குற்றம் சாட்டினார்.
மேலும், “ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுகிறார்கள். 83 வயதான உங்களுக்கு ஓய்வுபெற விருப்பம் இல்லையா?” என்று சரத்பவாரிடம் கேள்வி எழுப்பினார்.
நான் தான் தலைவர்!
இதனைத்தொடர்ந்து டெல்லியில் என்சிபி தலைவர் சரத்பவார் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், எம்பிக்கள், தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்பவார், “இன்று நடைபெற்றுள்ள கூட்டம் எனக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. நான் தான் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர். எனக்கு 82 அல்லது 92 வயதாக இருந்தாலும், நான் திறம்பட செயல்படுவேன்” என்றார்.
மேலும், தன்னிடம் கட்சி பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் கூறியதை மறுத்த சரத் பவார், அரசியல் நிலவரம் மற்றும் கட்சிப் பிளவு குறித்து எதைச் சொன்னாலும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
ராகுல்காந்தி ஆதரவு!
கூட்டத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ஜன்பத்தில் உள்ள சரத்பவாரின் இல்லத்திற்கு சென்று தனது ஆதரவினை அவருக்கு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
தாம்பரம் காவல்துறையில் தடாலடி மாற்றம்: தயார் நிலையில் டிஜிபி
7 மணி நேரம்… 10 மில்லியன்: சாதனை படைத்த த்ரெட்ஸ்!