“யாருக்கு பதவி ஆசை உள்ளது என்பதை மக்கள் முடிவு செய்யட்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (ஆகஸ்ட் 29) செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,
“அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியின் அப்பாவீட்டுச் சொத்தா? தலைமைக் கழகத்தை பூட்ட யார் அதிகாரம் கொடுத்தது? ரத்தம் சிந்தி வளர்ந்த இயக்கம்.
என் வீட்டில் நானே திருடுவேனா? தலைமைக் கழகம் எனது வீடு. அதிமுகவில் மட்டுமே தொண்டர்கள் தலைமைப் பதவிக்கு வர முடியும்.
கெளரவமான பொதுக் குழுவில் சி.வி.சண்முகம் செய்தது கேலிக்கூத்தான செயல். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோது 10 அமைச்சர்கள் ராஜினாமா செய்வோம் என அறிவுறுத்தினேன்.
ராஜினாமா செய்துவிட்டு தொகுதியில் கட்சி வேலை பார்க்க வலியுறுத்தினேன். அப்போது சில அமைச்சர்கள், ‘இவன் என்ன நம்ம அடிமடியிலேயே கைவைக்கிறான்’ எனப் பேசினர்.
இதுபோல், நான் பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நான் பேசினால் யாரும் பேச முடியாது. எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்கிறேன்.
கீழே போய் மக்களைச் சந்திப்போம், அவர்கள் முடிவு செய்யட்டும். பதவி ஆசை இல்லாத என்னை பதவி ஆசை உள்ளவன் என கூறுகிறார்கள்.
மக்களே முடிவு செய்யட்டும். அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அதிமுகவைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
பழச மறந்து பன்னீர் சொல்றத கேளுங்க : டி.டி.வி.தினகரன் சூசகம்