கட்சியைக் கூட தனது மாமாவிடம் இருந்து பறித்த சந்திரபாபு நாயுடுவுக்கு, வரும் தேர்தலில் மக்கள் விடைகொடுக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் நரசன்னப்பேட்டையில் நவீன டிஜிட்டல் வருவாய் பதிவேடுகள் தயாராக உள்ள கிராமங்களில் விவசாயிகளுக்கு நில உரிமை ஆவணங்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் இன்று (நவம்பர் 23) தொடங்கி வைத்தார்.
பின்னர் பொதுமக்கள் முன் பேசிய அவர், நலத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து கூறிய அதே வேளையில், எதிர்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குறித்து அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நான் ராமர்; அவர் ராவணன்
அவர் பேசுகையில், ”சந்திரபாபு ஒரு அரசியல் கொள்ளைக்காரர். அவரின் வார்த்தைகளை மக்கள் நம்ப வேண்டாம். எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர் ஆகியோர் தனிக்கட்சி அமைத்து ஆட்சிக்கு வந்தனர்.
அவர்களின் வழியிலேயே நானும் தனிக்கட்சி அமைத்து ஆட்சிக்கு வந்தேன். ஆனால் தனது மாமா ராமாராவிடம் இருந்து தெலுங்கு தேசம் கட்சியை கைப்பற்றியுள்ளார் சந்திரபாபு.
தனிக்கட்சி அமைத்து ஆட்சிக்கு வந்ததால் என்னை ’ராமர்’ என்றும், மாமா கட்சியை தனதாக்கி கொண்ட சந்திரபாபுவை ’ராவணன்’ என்றும் மக்கள் அழைப்பர் என்று கூறினார்.
சந்திரபாபுவுக்கு விடை கொடுங்கள்
மேலும் “சந்திரபாபு நாயுடு, அவரது அரசியல் மற்றும் ஊடக கூட்டாளிகள் தனது அரசாங்கத்தை அவதூறு செய்ய முயற்சிக்கின்றனர். அதனை மக்கள் நம்ப வேண்டாம்.
வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் அவருக்கு ’பை பை’ என்று விடை கொடுக்க வேண்டும். அவருக்கு மீண்டும் அரசியல் வாய்ப்பை பொதுமக்கள் வழங்கக்கூடாது.
அதே வேளையில் மக்களாகிய நீங்கள் எனது தலைமையிலான இந்த அரசு நல்லது செய்தது என உணர்ந்தால், வரும் தேர்தல்களில் மீண்டும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்” என்று ஜெகன் மோகன் ரெட்டி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆந்திர வருவாய்த் துறை அமைச்சர் தர்மன பிரசாத ராவ், சபாநாயகர் தம்மினேனி சீதாராம், அமைச்சர் சிதிரி அப்பல் ராஜூ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
டி10 லீக் : கிரிக்கெட் களத்தில் மீண்டும் சுரேஷ் ரெய்னா
கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?