ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் இன்னும் 7 தினங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார். ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் என்பதால் ராமநாதபுர தொகுதி நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பலாப்பழ சின்னத்துடன் ஓபிஎஸ் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அப்போது, தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், பேருந்து நிலையம் அமைத்துத் தரப்படும் என்று பல வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிநகர், ஓட்டப்பாலம் உள்ளிட்ட பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், “மீனவர்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, சமுதாயக் கூடங்கள் அமைத்தல், தொகுதி பிரச்சினைகளைப் பிரதமர் மோடியின் கவனத்துக்கு எடுத்துச் சென்று தீர்வு காணப்படும்” என்று வாக்குறுதிகளை அளித்தார்.
மக்களிடம் நேரடியாகப் பேசி, அவர்களது குறைகளைக் கேட்டறிந்தும் வருகிறார்.
புதுக்கோட்டை பகுதியில் பேசிய அவர், “தேர்தலில் போட்டியிட நான் கேட்ட சின்னங்களையே என்னை எதிர்த்து என் பெயரிலேயே போட்டியிடுபவர்களும் கேட்டனர். இந்நிலையில் குலுக்கல் முறையில் எனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது. அவர்கள் எல்லாம் ஒ.பன்னீர்செல்வம்… நான் ஓ.பன்னீர்செல்வம்…” என விளக்கி கூறி வாக்கு சேகரித்தார்.
“ஜல்லிக்கட்டை மீட்டவர் ராமநாதபுரம் மக்களின் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பார்” என்று கூறி ஓபிஎஸ் ஆதரவாளர்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இதே தொகுதியில் திமுக கூட்டணியில் நவாஸ் கனி எம்.பி. போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்.. இதுதான் காரணமா?… ரசிகர்கள் ஷாக்!
‘தெறி காம்போ’ பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் ஏ. ஆர். முருகதாஸ்