நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக இளைஞரணிச் செயலாளரும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சருமான உதயநிதி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் திமுக சார்பில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரைக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மார்ச் 26) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே கோவிட் வார்டுக்குள் சென்று, நோயாளிகள் நலமாக இருக்கிறார்களா என விசாரித்த ஒரே முதலமைச்சர் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நமது இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருப்பது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் தான்.
கோவிட் ஊசி போட்டால் மட்டுமே, கொரோனாவில் இருந்து வெளியில் வர முடியும் என ஒட்டு மொத்த இந்தியாவிற்கே வழிகாட்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள் தான்.
தமிழகத்தில் மிகப்பெரிய நிதி நெருக்கடி இருக்கும்போதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். பொறுப்பேற்றதும் முதலமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம்.
நான் அதிக இடங்களுக்கு தற்போது பயணம் செய்கிறேன். அனைத்து இடங்களிலும் இந்த திட்டத்தால் மகளிர் பயன்பெறுவதை நான் பார்க்கிறேன்.
இதைத்தொடர்ந்து, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு “காலை உணவுத் திட்டம்”.
இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள்.
அடுத்த திட்டம், “புதுமைப்பெண் திட்டம்”.
இத்திட்டம் பெண் குழந்தைகள் பள்ளி படிப்பு மட்டுமல்லாமல், கல்லூரி படிப்பையும் தொடரவேண்டும் என்று கொண்டுவரப்பட்டது.
அரசு பள்ளியில் பயின்ற மாணவிகளின், கல்லூரி படிப்பிற்காக மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்குவது தான் புதுமைப்பெண் திட்டம்.
அனைத்திற்கும் மேலாக, “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்”. இது திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி.
2023 செப்டம்பர் மாதம் ஆரம்பித்து இந்த மாதம் வரை மகளிர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகிறார்கள். இத்திட்டத்திற்கு ஒரு கோடியே 60 லட்சம் மகளிர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது, அத்திட்டத்தில் சில குறைபாடுகள் இருக்கின்றன.
நான் உறுதி தருகிறேன், இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் அனைத்து குறைகளும் களையப்பட்டு 100 சதவீத மகளிருக்கும் இந்த உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுகவினர் செய்த சாதனைகளை மக்களிடம் விளக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, தமிழகத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? எதுவும் செய்தது இல்லை.
தமிழக மக்களின் தேவைகளை நிறைவேற்று வகையில், ஒன்றிய பாஜக அரசு எந்த திட்டத்தையும் முன்னெடுக்கவில்லை. ஆனால், ஒன்று செய்திருக்கிறார்கள்.
2019ஆம் ஆண்டு மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி சென்றார். அதன்பின், அதற்கான எந்த அடையாளம் இல்லை.
தற்போது, எடப்பாடி பழனிசாமி 2 நாட்களாக, ‘உதயநிதி எப்போது பார்த்தாலும் கல்லை தூக்கி கொண்டு வருகிறார்’ எனச் சொல்கிறார். நான் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து எடுத்துவந்த கல்லை காட்டுகிறேன். ஆனால், அவர் மோடியிடம் பல்லை மட்டும் தான் காட்டுகிறார்.
உதயநிதி ஒரே பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறார் என்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆமாம், நான் ஒரே கொள்கையைத் தான் பேசுவேன். எங்களது தேவை அனைத்தும் நீட் தேர்வு ரத்து, எய்ம்ஸ் மருத்துவமனை, மாநில உரிமைகள், மொழி உரிமை.
கலைஞர் கற்றுக்கொடுத்த ஒரே கொள்கையை தான் நான் பேசுவேன். அதிமுகவை போல் பச்சோந்தியாக, ஆளுக்கு தகுந்த மாதிரி நான் பேச மாட்டேன். எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை பார்த்தால் ஒரு மாதிரி பேசுவார். மோடியிடம் ஒரு மாதிரி பேசுவார். இப்படி ஒவ்வொருவரிடம் ஒவ்வொரு மாதிரி பேசுவார். நான் அப்படி இல்லை.
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கான முடிவுகள், ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி கலைஞரின் 101வது பிறந்தநாள். அவருக்கு திமுகவின் வெற்றியை தவிர வேறு சிறந்த பரிசை நம்மால் கொடுக்க முடியாது.
அதனால், திமுக வேட்பாளர் அண்ணாதுரையை வெற்றி பெற செய்வது தொண்டர்கள் உங்கள் கையில் இருக்கிறது” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Vettaiyan: டீசர் ரிலீஸ் எப்போது?