தனக்கு நெஞ்சில் வலி இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிபதி அல்லியிடம் தெரிவித்துள்ளார்
அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு அவரை அமலாக்கத்துறை கைது செய்த போது நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்றைய தினம் மருத்துவமனைக்கு சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை வரும் ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே கடந்த ஜூன் 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது.
அதன்பின் 24 ஆம் தேதி சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இவ்வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
காவிரி மருத்துவமனையில் இருந்தவாறு செந்தில் பாலாஜி காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
அப்போது செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி இப்பொழுது உடல்நிலை எப்படி இருக்கிறது என்று விசாரித்துள்ளார்.
அதற்கு செந்தில் பாலாஜி, இன்னும் நெஞ்சில் வலி இருக்கிறது. வலியோடு தான் இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதை விசாரித்த நீதிபதி மேலும் 15 நாட்கள் அதாவது ஜூலை 12ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
பிரியா
குண்டர் சட்ட அதிகாரம்: மதுரை கிளை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!