பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்: சீமான் அதிரடி!

அரசியல்

ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன் என சீமான் இன்று (ஆகஸ்ட் 27) தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

வடக்கே வாரணாசியில் போட்டியிட்டதுபோல அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தெற்கே உள்ள ஆன்மீக தளமான ராமநாதபுரம் தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று தமிழக பாஜகவினர் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் திருமண விழாவில்  அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.

அப்போது சீமான் பேசுகையில், ”பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு உள்பட இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் குரல் கொடுத்துள்ளேன். ஆனால் இஸ்லாமியர்கள் எப்போது என்னை நம்பப் போகிறீர்கள் என்று தெரியவில்லை.

ஒரு வேளை தமிழ்நாட்டில் மோடி போட்டியிட்டால் எனக்கு ஒரு விடிவுகாலம் வரும். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் போட்டியிட்டால் நான் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன். அன்று நான் பாஜகவுக்கு கடும் போட்டி அளிக்கிறேன் என்று என்னை நம்புவீர்கள்.

நான் பேசியது பல ஆண்டுகளாக தாங்கி வரும் வலியின் மொழிதானே தவிர இஸ்லாமியர்களுக்கு வலியை ஏற்படுத்தும் எண்ணமும் இல்லை.

விடுதலைப் பெற்ற இந்தியாவில் எத்தனை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பிரதமராக இருந்துள்ளார்கள். ஒன்றுக்கும் பயன்படாத ரப்பர் ஸ்டாம்ப் பதவி மட்டும் தான் கொடுத்துள்ளார்கள்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மை தேசிய இனமான தமிழினத்தின் மக்கள். அவர்களை சிறுபான்மையினர் என எப்படி கூற முடியும்?  சிறுபான்மையினர் என்றால் சலுகை கிடைக்கும் என்கிறீர்கள். என்ன சலுகை கிடைத்துவிட்டது உங்களுக்கு? நமக்கு  உரிமைதான் வேண்டுமே தவிர சலுகை அல்ல.

ஒருவர் மதம் மாறிவிடலாம். அவர்களின் மொழியையும், இனத்தையும் மாற்றிவிட முடியுமா? அப்படி இருக்க என்ன சிறுபான்மை பெரும்பான்மை என்கிற பிரிவினை. இதனால் தான் சிறுபான்மை என்று சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சொன்னேன். ஐயா பெரியார் கூறியது போல நான் பேசியதில் நல்லது ஏதாவது இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். தவறாக இருந்தால் விட்டுவிடுங்கள்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை ரயில் தீ விபத்து: கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் மீட்பு!

உலக கோப்பை 2023: மேத்யூ ஹைடன் விரும்பும் இந்திய அணி வீரர்கள்!

 

 

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

1 thought on “பிரதமர் மோடிக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்: சீமான் அதிரடி!

  1. அண்ணே, நேத்திக்குதானே சாத்தான் என பேசினீர்கள்; இன்றோ இப்படி கதைக்கறியளே.
    அது நாறவாய், இது வேற வாய்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *