நான் இரவில் தூங்காததற்கு காரணம் லியோனி தான் – ஸ்டாலின்

Published On:

| By christopher

”பேண்ட் சட்டை மட்டுமே அணிந்த லியோனியை முதன்முதலில் நான் தான் வேட்டி கட்ட வைத்தேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி எழுதிய, ‘வளர்ந்த கதை சொல்லவா’ என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை அறிவாலய வளாகத்தில் இன்று (மார்ச் 25) நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில், “லியோனிக்கு அவரது பேச்சு மாதிரியே எழுத்தும் சிறப்பாக வந்துள்ளது. பட்டிமன்றங்களில் அவரிடம் இருந்து வரும் நகைச்சுவை தென்றலாய் வரும் டைமிங் காமெடிகள் மாதிரி தான் அவருடைய எழுத்தும் உள்ளது. அவரை ’நாவரசர்’ என்றும் சொல்லலாம்.” என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஆரம்ப காலங்களில் லியோனியின் பேச்சுகளை கேசட்டுகளில் கேட்டு தமிழ்நாடே மயங்கியது. நானும் காரில் பயணம் செய்யும் போது அவர் பேசுவதை கேட்டபடியே சென்றுள்ளேன்.

நான் திமுக இளைஞரணியின் தலைவராக பொறுப்பேற்றபோது, பல மாவட்டங்களுக்கு பயணம் செய்வோம். பெரும்பாலும் இரவு நேர பயணங்கள் தான். இப்போது போல அப்போதும் நான் இரவில் தூங்கமாட்டேன் என்பதால் நான் தான் கார் ஓட்டுவேன். நான் தூங்காமல் லியோனியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே தான் கார் ஓட்டுவேன். அப்படி கேட்டு கேட்டு நான் அவருடைய ஃபேன் ஆகவே மாறிவிட்டேன்.” என்றார்.

மேலும் அவர், “முதன்முதலில் லியோனியை 1996ஆம் ஆண்டு கழக மேடைக்கு நான் தான் அழைத்து சென்றேன். கலைஞரின் பவளவிழா சிறப்பு பட்டிமன்றத்திலும் அவரை பங்கேற்க வைத்தேன்.

அப்போதெல்லாம் லியோனி திமுக உறுப்பினர் கிடையாது. 2006ம் ஆண்டு தான் திமுகவில் சேர்ந்தார். அதுவரை பேண்ட் மட்டுமே அணிந்த அவரை கலைஞர் கையால் கரை வேட்டி கொடுத்து, முதன்முதலில் வேட்டி கட்ட வைத்தேன்” என்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஷிப்: இந்தியாவுக்கு முதல் தங்கம்!

’பிரதமர்’ ஸ்டாலின்: ஹெச்.ராஜா டங் ஸ்லிப்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel