”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!
“நானும் இறுமாப்போடு சொல்கிறேன். திமுகவிற்கு 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்” என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ’2026 தேர்தலில் 200 இடங்களில் வெல்வோம், தமிழகத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்வோம்’ என்று தொடர்ந்து கட்சியினர் மத்தியில் கூறி வருகிறார்.
இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் நேற்று பங்கேற்ற தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் மணிப்பூர் சம்பவத்தை குறிப்பிட்டு ஆளும் பாஜகவையும், வேங்கைவயல் சம்பவத்தை குறிப்பிட்டு திமுகவையும் விமர்சித்தார்.
மேலும் ”மக்களின் உணர்வை மதிக்க தெரியாமல், இறுமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களே, நீங்கள் உங்களது சுயநலத்திற்காக பலவழிகளில் பாதுகாத்து வரும் உங்கள் கூட்டணி கணக்குகள் அனைத்தையும், 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என்று விஜய் பேசினார்.
அவரது பேச்சுக்கு திமுக தலைவர்கள் பலரும் பதிலடி கொடுக்கும் விதமாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில், திமுக மாநில ஆதி திராவிடர் நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்செந்தூர் ஐஎம்ஏ மெமோரியல் ஹாலில் இன்று நடைபெற்றது.
இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது கட்சி தொண்டர்களுக்கு மத்தியில் அவர் பேசுகையில், “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து செயல்படகூடியது திமுக ஆட்சி என நாம் தொடர்ந்து நிரூபித்து காட்டியிருக்கிறோம். இன்று வாய்சவடால் எல்லாம் நிறைய வரலாம். ஆனால் நிஜத்தில் அவர்களுக்கு எவ்வளவு வரும் என்று தெரியாது. இதுபோன்று பேசியவர்கள் யாரும் ஒன்றும் செய்து காட்டியது இல்லை. அதை மக்களுக்கு நாம் புரிய வைக்க வேண்டும்.
தேர்தல் வெற்றி என்பது உங்கள் கரங்களில் இருக்கிறது. நீங்கள் கட்டுப்பாட்டுடன் பணியாற்றினால், தலைவர் ஸ்டாலின் சொல்வது போல 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன். வெற்றி நிச்சயம்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா
”ஆதவ் அர்ஜுனாவின் நட்பு, விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல” – அமீர் எச்சரிக்கை!
நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!
பிளாஸ்டிக் ஸ்மைல்: ஐஸ்வர்ராயுடன் காதல் முறிவு ஏன்? மனம் திறந்த விவேக் ஒபராய்