”விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” : கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி பேட்டி!

Published On:

| By christopher

"I accept criticism" : Udhayanidhi interview at kalaingar memorial!

“துணை அமைச்சரானதற்காக என் மீது வைக்கப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு என் பணியின் மூலம் பதில் தருவேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது. அதனைத்தொடர்ந்து நேற்று இரவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் துணை முதலமைச்சராக இன்று (செப்டம்பர் 29) மாலை பதவியேற்க உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடத்திற்கு சென்று உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவருக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், டி.ஆர்.பி.ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் அளித்த பேட்டியில், “தமிழக முதலமைச்சர் நேற்று இரவு எனக்கு துணை முதலமைச்சர் என்ற புதிய பொறுப்பை கொடுத்துள்ளார். இது பதவியல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து மக்களுக்காக அதிகமாக உழைக்கக்கூடிய வாய்ப்பை கொடுத்துள்ளார். அதற்காக முதலமைச்சர், பொதுச்செயலாளர் மூத்த அமைச்சர்கள், அனைத்து அமைச்சர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பலரும் எனக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே போன்று பலர் முன்வைத்த விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்கிறேன்.

எனக்கு இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட போதும், என்மீது விமர்சனங்கள் வைத்தனர். அதற்கு என் பணிகளை மட்டுமே பதிலாக நினைத்து உழைத்துள்ளேன். தற்போதும் என் மீது வைத்துள்ள விமர்சனங்களை உள்வாங்கி, என் பணியின் மூலம் அதை நியாயப்படுத்துவேன்” என உதயநிதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணா என்றொரு அறிஞர்! 

திமுக பவளவிழாவில் கனிமொழி மிஸ்ஸிங் : காரணம் என்ன?