”தந்தை பெரியாருக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால், அந்த தடியால் அடித்தே உங்களைக் கொன்றுவிடுவார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 49ஆவது நினைவு நாளை ஒட்டி இன்று (டிசம்பர் 24) நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பெரியார் சிலையை வைத்து எப்படி பெரியாரின் புகழை பரப்புவீர்கள். பெரியார் கருத்தியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கருத்தியலை பரப்ப திராவிடம் என்ற பெயர் வேண்டியது இல்லை. அதற்கு அவரது கருத்துக்களே ஏராளம் உள்ளது.
வல்லபாய் படேலுக்கு 3000 கோடியில் சிலை வைத்தற்கும் பெரியாருக்கு 100 கோடியில் சிலை வைத்ததற்கும் என்ன வேறுபாடு உள்ளது.
தன்மீது வீசப்பட்ட செருப்புகள், பெயர் வைத்தால் காசு, படம் எடுத்தால் காசு, வீட்டிற்கு சாப்பிட வந்தால் காசு என்று வசூலித்து அவற்றை சேமித்து, பள்ளிக்கூடங்களைக் கட்டியவர் பெரியார்.
அப்படிச் சேர்த்த பணத்தில் வந்தததுதான் பெரியார் திடல் என்ற அறக்கட்டளை. அத்தகைய எளிய மகனுக்கு நீங்கள் ரூ.100 கோடியில் சிலை வைத்தால், அந்த தடியால் அடித்தே உங்களைக் கொன்றுவிடுவார். பெரியாரை அவமானப்படுத்துவதா, இல்லை பெருமைபடுத்துவதா?
நான் இறந்ததும் நூறு கோடியில் சிலை வைப்பார்கள் என நினைத்து போராடினாரா? முன்னோர்கள் போராடியது எல்லாம் சிலை வைப்பார்கள், மாலை போடுவார்கள் என்றா போராடினார்கள். வல்லபாய் படேல் சிலையைப் பெரிதாக வைத்துவிட்டீர்கள். சிங்கப்பூரில் சென்று கேளுங்கள்.
யார் எனக் கேட்பார்கள். காந்தி, அம்பேத்கரை தெரியும். அவர்கள்தான் இந்தியாவின் அடையாளம். சிலை புகழ் சேர்க்காது. சிந்தனைதான் புகழ் சேர்க்கும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
திராவிடம் என்றாலே சமூக மாற்றம்தான்: முதல்வர் ஸ்டாலின்
“சி.வி.சண்முகம் இதோட நிறுத்திக்கிட்டா நல்லது” – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!