தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த 397 கோடி ரூபாய் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இன்று (ஜூலை 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதலில் ரூபாய் 397 கோடி அளவிலான மிகப்பெரிய ஊழல் பொது ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டு சதி மூலமாக எப்படி நடந்தது என்பதற்கான ஆதாரங்களையும்,
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தே டெண்டர் அதிகாரி காசி இயங்குவதற்கான முகாந்திரங்களையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கமான லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் புகாராக கொடுத்துள்ளது.
ஒரே விலையை கோரும் ஒப்பந்ததாரர்கள்
கடந்த இரண்டு ஆண்டுகளில் 45 ஆயிரம் டிஸ்ட்ரிபியூஷன் ட்ரான்ஸ்பார்மர் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் 25kva, 63kva, 100kva, 200 kva, 250 kva மற்றும் 500 kva என்று பலதரப்பட்ட கெபாசிட்டியில் கோரப்பட்டுள்ளது.
பெரும்பாலான ஒப்பந்தங்கள் 2021 அக்டோபர் மாதம் கோரப்பட்டு நவம்பர் மாதம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு டெண்டரிலும் இவர்கள் செய்த மிக முக்கியமான கூட்டு சதி என்பது கிட்டத்தட்ட 30 ஒப்பந்ததாரர்களை ஒவ்வொரு டெண்டரிலும் அனைவரும் ஒரு ரூபாய் கூட மாறாமல் அதே தொகையை ஒப்பந்த புள்ளியில் கோரியுள்ளனர்.
கீழே ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் எவ்வளவு ஒப்பந்ததாரர்கள் ஒரே விலையை குறிப்பிட்டுள்ளனர் என்பதை தெரிவித்துள்ளோம்.
டெண்டர் ஆய்வுக்குழுவுக்கும் தொடர்பு!
டெண்டர் போடுவதற்கு முன்பாகவே அனைவரும் கூட்டு சதி செய்து ஒரே தொகைக்கு கோர முடிவு செய்தால் ஒழிய இதற்கான சாத்தியமே கிடையாது. மேலும் டெண்டர் ஆய்வு குழு இதை பார்த்த உடனேயே இதில் ஒரு மிகப்பெரிய கூட்டுசதி உள்ளது என்பதை உணர்ந்து உடனடியாக இந்த டெண்டர்களை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால் டெண்டர் ஆய்வுக்குழுவும் இந்த கூட்டு சதியில் உள்ளது என்பது தெள்ளத் தெளிவாக வெளிவந்துள்ளது.
டெண்டர் ஆய்வு குழுவில் உள்ள Material management தலைமை பொறியாளர் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் Financial Controller purchase அவர்கள் ஒப்பந்ததாரர்கள் கோரிய தொகையில் ஒரு சில ஆயிரங்களை குறைத்து கூட்டு சதி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு டிரான்ஸ்பார்மர் சப்ளை செய்யும் ஆணையை சமமாக பிரித்துக் கொடுக்கின்றனர். இந்த கூட்டு சதி செய்வதற்கான மிக முக்கியமான காரணம் இதன் மூலமாக ஒரு மிகப்பெரிய ஊழலை அரங்கேற்றுவது தான் என்பது இந்த தகவல்களில் இருந்து தெரிகிறது.
அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு!
ஏனென்றால் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் சந்தை மதிப்பை விட மிக மிக அதிகமாக கொடுக்கப்பட்டு, இதனால் அரசுக்கு கிட்டத்தட்ட ரூபாய் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை அறப்போர் இயக்கம் கண்டுபிடித்துள்ளது.
உதாரணத்திற்கு 800 எண்ணிக்கையில் 500 kva டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஒப்பந்தத்தை எடுத்துக் கொண்டால் இந்த ஒப்பந்தம் நவம்பர் 2021ல் திறக்கப்படும் பொழுது 26 ஒப்பந்ததாரர்களும் ஒரு டிரான்ஸ்பார்மரின் விலையாக அச்சு அசல் மாறாமல் ஒரே விலையான ரூபாய் 13,72,930 க்கு ஒப்பந்தபுள்ளி சமர்ப்பித்துள்ளனர்.
இதை ரத்து செய்வதற்கு பதில் டெண்டர் ஆய்வு குழு விலையை 12,49,800 ரூபாய்க்கு குறைத்து பதினாறு ஒப்பந்ததாரர்களுக்கு ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கும் 50 ட்ரான்ஸ்பார்மர்கள் விகிதம் ஆணையை சமமாக பிரித்துக் கொடுக்கின்றனர்.
ஆனால் டெண்டர் போடும்பொழுது இந்த டெண்டர் மதிப்பு வெறும் 63.18 கோடி தான். அதாவது ஒரு டிரான்ஸ்பார்மரின் டெண்டர் தொகை 7,89,750 ரூபாய் தான். அதே காலகட்டத்தில் ஆகஸ்ட் 2021ல் அதே தரத்தில் ராஜஸ்தானில் போடப்பட்ட 500 kva ஒப்பந்தமானது 7,87,311 ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.
இன்றளவிலும் கூட அரசு ஒப்பிடும் ஜெம் போர்டலில் 8,91,000 ரூபாய்க்கு இந்த டிரான்ஸ்பார்மர் கிடைக்கிறது. தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர்கள் சங்கமும் 2021-22 க்கான விலைப்பட்டியலில் இந்த டிரான்ஸ்பார்மரின் விலை 7,89,750 என்று குறிப்பிட்டுள்ளது.
சந்தை மதிப்பை விட ஒவ்வொரு டிரான்ஸ்பார்மரும் 4 லட்சத்திற்கும் மேலாக அதிக விலைக்கு கூட்டு சதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஒரு ஒப்பந்தத்தில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 34 கோடியே ஆகும். இதுபோல ஒவ்வொரு ஒப்பந்தத்தையும் அறப்போர் இயக்கம் பலதரப்பட்ட சந்தை மதிப்புகளுடன் ஆய்வு செய்தோம்.
டெண்டர்களின் விவரம்!
எப்படி ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் டெண்டர் சட்டங்களை மீறி அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்துள்ளனர் என்பதை 7 டெண்டர்களுக்கு கீழே விவரித்துள்ளோம்.
செந்தில் பாலாஜி வீட்டிலிருந்தே நடந்த ஊழல்
இந்த ஊழலுக்கான மிக முக்கிய புள்ளியாக திகழ்பவர் மின்சார வாரிய பொது ஊழியரான காசி என்னும் கொள்முதல் பைனான்சியல் கண்ட்ரோலர். இவர் மின்சார வாரியத்திற்கு வேலைக்கு செல்லாமல் தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கு சென்று அங்கிருந்து தான் மின்சார வாரிய டெண்டர்களை இவர் fixing செய்வதாக சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் இவர் தினமும் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்று தான் வேலை செய்கிறார் என்பதை நாமும் பார்த்தோம்.
ஆதாரமாக அவர் சில நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு செல்லும் போட்டோ ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் கொடுத்துள்ளோம்.
காசிக்கு துணைபோன ராஜேஷ் லகானி
காசி கடந்த ஆட்சியில் பொதுநலனுக்கு எதிராக செயல்பட்டார் என்பதற்காக செப்டம்பர் 2020இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு கட்டாய ஓய்வுக்கான நோட்டீஸ் ஆணையும் மார்ச் 2021ல் அப்போதைய மின்வாரிய இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் IAS கொடுத்தார்.
காசி இதன் மீது மேல் முறையீடு செய்ய வேண்டும் என்றால் அவர் மின்சார வாரிய போர்ட் இடம் விதிகள் படி மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆனால் ஆட்சி மாறியவுடன் ராஜேஷ் லகானி IAS மின்சார வாரிய தலைவர் மற்றும் இயக்குனர் ஆனவுடன் அவர் காசியின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து அவரை மீண்டும் வேலையில் சேர்க்கிறார். கட்டாய ஓய்வு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஒருவருக்கு விதிகளை மீறி ராஜேஷ் லக்கானி மீண்டும் பணியமர்த்தியாக தெரிகிறது.
மேலும் ராஜேஷ் லக்கானி செப்டம்பர் 2021 இல் கொள்முதலுக்கான பைனான்சியல் கண்ட்ரோலராக காசியை கொண்டு வருகிறார். இதன் பின் தான் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் மிகப்பெரிய ஊழலை காசி மற்றும் மற்றவர்கள் அரங்கேற்றுகிறார்கள்.
காசி டெண்டர் வழங்கும் டெண்டர் ஆய்வுக்குழுவிலும் ஒருவராக இருக்கிறார். துறையின் முதன்மை ஊழியரல்லாத (not in first level position in department) காசி தினமும் அமைச்சர் வீட்டிற்கு சென்று அங்கிருந்து தான் செயல்படுகிறார் என்றால் இது அமைச்சர் செந்தில் பாலாஜியும் காசியும் எவ்வளவு நெருக்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்கள் சேர்ந்து இயங்கியிருக்கிறார்கள் என்பதற்கான முகாந்திரமாக அமைகிறது.
எனவே இந்த முகாந்திரம் வைத்து செந்தில் பாலாஜியையும் விசாரிக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் புகாரில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இது போன்ற டெண்டர்கள் எப்படி ஒரே விலையில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒப்பந்தபுள்ளி போட்டு ஊழல் செய்கிறார்கள் என்பதை பார்த்து நிர்வாகத்தின் தலைமை அதிகாரியான ராஜேஷ் லகானி IAS இந்த டெண்டர்களை ரத்து செய்து இருக்க வேண்டும். மாறாக மின்சார வாரிய போர்டில் இதை முன்வைத்து இந்த அனைத்து டெண்டர்களுக்கும் ஒப்புதலும் வாங்கியுள்ளார்கள்.
முதலமைச்சர் என்ன செய்ய போகிறார்?
எனவே அறப்போர் இயக்கம் இந்த 397 கோடி ரூபாய் மாபெரும் ஊழலில் காசி, மற்ற டெண்டர் ஆய்வு குழு அதிகாரிகள், போட்டி போட்டு ஒரே விலை கொடுத்த நிறுவனங்கள், இயக்குனர் ராஜேஷ் லக்கானி IAS, அமைச்சர் செந்தில் பாலாஜி என அனைவரின் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய வேண்டும் என்று இன்றைய தினம் புகார் கொடுத்துள்ளோம்.
இது போன்ற மின்சார வாரிய ஊழலால் தான் மின்சார வாரியம் மிகப்பெரிய கடனில் ஆழ்ந்துள்ளது. இந்த ஊழல்களினால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய அரசு ஒவ்வொரு ஆண்டும் நம்முடைய வரிப்பணத்தை மின்சார வாரியத்திடம் கொடுத்து வேறு மக்கள் திட்டங்களுக்கு அந்த பணம் செலவிட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த ஊழல் நிர்வாகச் சீர்கேட்டினால் இந்த பாரங்கள் மின் கட்டண உயர்வு என்ற பெயரில் பொதுமக்கள் மீது தான் நேரடியாக வைக்கப்பகிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஊழல் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செந்தில்பாலாஜி வழக்கு: 3வது நீதிபதி விசாரணை ஒத்திவைப்பு!
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது: உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு! தேனிக்கு இடைத் தேர்தலா?
ஒவ்வொரு குடிமகனின் 10 ரூபா வயித்தெறிச்சல் சும்மா விடுமா?
அதிமுக ஆட்சி ஒன்றும் யோக்கியம் இல்ல..அவர்கள் 5 ரூபா அதிகம் வாங்கினார்கள்…ரெகுலராக கடைக்கு போகிறவர் இப்ப கூடுதல் பணம் 5 இல்லை என்றால் பரவால்ல அடுத்த தடவை கொடு என்பார்கள்..ஆனா இந்த பேய் தீமுக ஆட்சியில் ஒரு குவார்ட்டர் கூட 10 ரூபா அதிகம் இல்லாமல் வாங்கவே முடியாது..ரொம்ப கேட்டால் முஷ்டி மடக்குவார்கள்…
அணில் அண்ணன் அப்ப ஆயுசுக்கும் களி தானா! கொஞ்சமாவது நேர்மை வேண்டாமா! இந்த பாவங்களில் முதல் குடும்பத்திற்கு பங்கு இல்லை என சத்தியம் செய்வார்களா?! கடவுள் எவ்வளவு பொறுப்பார்..?!
இதோ ஆட்டத்தை ஆரமித்து விட்டார்..செய்த பாவங்களை போக்க வக்கீல்களிடம் கோடிகள் செலவு செய்வதை விட மக்களிடம் மானசீக மன்னிப்பு கேட்டு ஆன்ம அமைதி பெறுங்கள் சார்..அது உம் அடுத்த பரம்பரையை ஆவது காக்கும்…