வைஃபை ஆன் செய்ததும் யூடியூபில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் வீடியோ வந்து விழுந்தது.
“திமுகவில் ஒரே கட்சி ஒரே கொடி என்றிருந்த எனக்கு 63 வயதில்தான் எம்பி பதவி கிடைத்தது. ஆனால் நாங்கள் கொண்டு வந்து சேர்த்தவனெல்லாம் மந்திரி ஆயிட்டான். இதையெல்லாம் ஜீரணித்துக் கொண்டுதான் இருக்க வேண்டும்.
துரோகம் செஞ்சிட்டுப் போனவன்லாம் இப்ப வந்து கொஞ்சிக் குலவுறான். அவங்களுக்கும் பதவி கிடைக்குது’ என்று மறைந்த எம்.பி. ஜின்னா படத்திறப்பு நிகழ்வில் பேசியிருக்கிறார் ஆர்.எஸ்.பாரதி.
அந்த வீடியோவை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவில் பொதுக்குழு முடிந்த பிறகு கடந்த வாரம் பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் நடந்தது. மாநில நிர்வாகிகளாக பலர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் சீனியர் திமுக காரர்களாக இருந்தாலும் கணிசமானோர் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களாகவும் இருந்தனர்.
இதுகுறித்து சமூக தளங்களில் திமுக தொண்டர்கள் தங்களது கருத்துகளையும் குமுறல்களையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் திமுகவின் தலைவரான முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு தலைமைக் கழக நிர்வாகிகளையும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அணி அணியாக சென்று தலைமைக் கழக நிர்வாகிகளிடம் வாழ்த்து பெற்றபோது ஏற்கனவே இருந்த பழைய நிர்வாகிகளுடன் தனிப்பட்ட முறையில் தலைமைக் கழக நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ‘என்னய்யா… கட்சி எப்படி இருக்கு, தொண்டர்கள் என்ன சொல்றாங்க? எம்பி தேர்தல் எப்படி இருக்கும்?’ என்று தலைமைக் கழக நிர்வாகிகள் விசாரித்தபோது இதுதான் சமயம் என்று பொங்கித் தீர்த்துவிட்டார்கள் சில சீனியர் நிர்வாகிகள்.
‘ஆட்சிக்கு வந்து ஒன்னரை வருசம் ஆச்சு. கட்சிக்காரன் யாரும் நிம்மதியா இல்ல. நம்ம ஆளுங்களுக்கு பதவி கொடுப்பீங்கனு பார்த்தா, கண்டவனுக்கெல்லாம் மாநிலப் பொறுப்பு கொடுத்து வச்சிருக்காங்க. நம்ம தளபதியை எங்க மாவட்டத்துல மீட்டிங் போட்டு மிக மிக கொடூரமா திட்டியவருக்கு மாநில பொறுப்புனு அறிவிப்பு வந்திருக்கு. நாங்க எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவரோட போய் நிக்கிறது? கட்சியிலருந்து நீக்கப்பட்டவங்கள்லாம் எப்ப மறுபடியும் சேர்ந்தாங்கன்னே தெரியல.
அவங்களுக்கும் பதவி கிடைச்சிருக்கு. எங்க போயிட்டிருக்குன்னே தெரியல. ஏற்கனவே டாஸ்மாக் பார் விவகாரத்துல கட்சிக்காரங்களை எல்லாம் காவு கொடுத்தாச்சு. யாருக்கும் பார் கெடைக்கல. அதைப் பத்தி கேட்கப்போனா மரியாதையும் கெடைக்கல. இப்ப பதவியாச்சும் உண்மையான கட்சிக்காரனுக்கு கொடுப்பீங்கனு பாத்தா அதுவும் இல்ல’ என்று சரம்சரமாக வெடித்த திமுக நிர்வாகிகள் சொன்ன இன்னொரு விஷயம் தலைமைக் கழக நிர்வாகிகளை மேலும் அதிர வைத்துள்ளது.
அது என்னவென்றால்… ‘இன்னிக்கு வீட்டுக்கு வீடு கலைஞர் படம் இருக்குனு சொன்னா அந்த காலத்தில ஏராளமான கட்சிக்காரங்க குடும்பத்துக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தோம். அவங்க குடும்பமே இன்னிக்கும் திமுகவுக்கு ஓட்டு போடுது.
திமுகவுக்கு நிலையான வாக்கு வங்கி இருக்கிறதுக்கு முக்கிய காரணம் இது. கலைஞர் ஆட்சி செய்யும்போது போக்குவரத்துத் துறையில டிரைவர், கண்டக்டர், டெப்போவுல டெக்னீசியன், மின் வாரியத்தில் ஏ,இ. முதல் ஹெல்பர் வரைக்கும், ஊரக உள்ளாட்சித் துறை கிளர்க் ,. ஓவர்சியர், இந்து சமய அற நிலையத்துறை, தோட்டக் கலைத்துறை, ரேஷன் கடை வேலை இந்த மாதிரி
வேலைகள்ல கட்சிகாரங்களுக்கு செஞ்சிக் கொடுத்தோம். அதனால பல கட்சிக்காரங்களோட வாழ்க்கை பொருளாதார தன்னிறைவா இருந்துச்சு. கட்சி மேல பிடிமானமாக இருந்தாங்க.
ஆனா இன்னிக்கு ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருசம் ஆனாலும் கூட ஒரு டிரான்ஸ்பர் கூட கட்சிக்காரனுக்கு செய்ய முடியலை. எல்லா வேலைகளையும் டிஎன்பிஎஸ்சி பரிட்சை எழுதிதான் வரணும்னு கொண்டுவந்தாச்சு. அப்புறம் மாவட்டத்துக்கு மாவட்டம் எம்ப்ளாயின்ட்மென்ட் எக்ஸ்சேஞ்ச் எதுக்கு? கட்சிக்காரனுக்கு கடைநிலை வேலை கூட வாங்கித் தர முடியலை.
இன்னும் கொஞ்ச நாள்ல எம்பி தேர்தல் வந்துடும், அப்ப பூத்துக்கு வா, பிரச்சாரத்துக்கு வா, பூத் கமிட்டிக்கு வானு கட்சிக்காரங்களை கூப்பிட்டா முழுமனதோட வருவானா? இப்பவே, ‘பூத் கமிட்டிக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமா ஆளெடுத்துக்கங்க’னு சொல்றாங்க தொண்டர்கள்.
இதெல்லாம் கட்சித் தலைமைக்கு தெரியுமா தெரியாதா? நீங்கள்லாம் இதை தலைவருக்கு தெரியப்படுத்துங்க’ என சீனியர் நிர்வாகிகள் சீறி முடிக்க தலைமைக் கழக நிர்வாகிகள் தலை வரைக்கும் ஷாக் அடித்தது போல் உணர்ந்திருக்கிறார்கள்.
எப்படியாச்சும் தலைவர் நல்ல மூடுல இருக்கும்போது அவர்கிட்ட சொல்லிடுறோம்யா….’ என்று பதில் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொண்டர்களின் இதயத் துடிப்பைத்தான் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி போட்டு உடைத்துவிட்டார்’ என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
Comments are closed.