– ரவிக்குமார் எம்.பி.
திருநெல்வேலியில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்குப் பாதுகாப்புக் கொடுத்ததற்காக திருநெல்வேலி சிபிஐ எம் மாவட்டக்குழு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் சாதி என்னும் நோய் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது என்பதற்கு உதாரணமாகும்.
ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தியிருந்தால் இப்படியான தாக்குதல் நடந்திருக்காது.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கன்வில்கர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய 54 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு, ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றவேண்டும் என உத்தரவிட்டிருந்ததோடு அப்படி சட்டம் இயற்றும்வரை ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் பட்டியலிட்டிருந்தது.
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்குக் குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாக கூறிய உச்சநீதிமன்றம், தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டனை நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை அளித்தது.
தடுப்பு நடவடிக்கைகள்
ஆணவக் குற்றங்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளை மாநில அரசுகள் உடனடியாகக் கண்டறியவேண்டும்: அந்தப் பகுதிகளின் காவல் அதிகாரிகளுக்கு அதுகுறித்து விழிப்போடு இருக்குமாறு அறிவுறுத்தவேண்டும்; அந்தப் பகுதிகளில் எங்காவது சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடுவதாக செய்தி கிடைத்தால் அதை உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவேண்டும்;செய்தி கிடைத்ததும் டிஎஸ்பி மட்டத்தில் உள்ள அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்று சாதிப் பஞ்சாயத்து / கூட்டம் கூடக்கூடாது என மக்களிடம் எடுத்துரைக்கவேண்டும்;அதையும் மீறி சாதி பஞ்சாயத்து நடந்தால் அங்கேயே டிஎஸ்பி இருக்கவேண்டும்; அந்தப் பஞ்சாயத்தின் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவேண்டும்; அந்த கூட்டம் சட்டவிரோதமான முடிவுகளை எடுப்பதற்க்காகத்தான் கூடுகிறது என டிஎஸ்பி சந்தேகித்தால் அதைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம். ஆணவக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளோடு இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிவாரண நடவடிக்கைகள்
தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி சாதி பஞ்சாயத்து / கூட்டம் கூட்டப்பட்டால் ஐபிசி பிரிவுகள் 141,143,503 மற்றும் 506ன் கீழ் வழக்கு பதிவு செய்யவேண்டும்; அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் தம்பதியினரைப் பதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும்;
ஒவ்வொரு மாவட்டத்திலும் அத்தகைய தம்பதியினர் பாதுகாப்போடு இருப்பதற்கு ஏற்ற பாதுகாப்பு இல்லங்களைத் துவக்குவது குறித்து மாநில அரசுகள் சிந்திக்கவேண்டும்; கலப்பு மணம் செய்துகொள்ள விரும்புவோர் சட்டப்படியான வயதை எட்டியவர்களாக இருந்தால் அந்தத் திருமணம் நடைபெறுவதற்கான பாதுகாப்பை காவல்துறை தரவேண்டும்; தங்களது திருமணத்தை கௌரவத்தின் பெயரால் அவர்களது சாதியினரோ, குடும்பத்தினரோ, மற்ற எவருமோ எதிர்ப்பதாகப் புகார் தெரிவிக்கப்பட்டால் அதை டிஎஸ்பி விசாரித்து எஸ்பிக்கு அறிக்கை அளிக்கவேண்டும்; அந்த அறிக்கையின் அடிப்படையில் எஸ்பி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆணையிடவேண்டும்.
தண்டனை நடவடிக்கைகள்
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை காவல்துறையைச் சேர்ந்தவர்களோ மாவட்ட அதிகாரிகளோ பின்பற்றத் தவறினால் அதை வேண்டுமென்றே செய்த தவறாகக் கருதி அவர்கள்மீது உரிய துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் தண்டனை வழங்கப்படவேண்டும்; ஆறுமுகம் சேர்வை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிபடையில் ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்;
சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்பி, மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் அடங்கிய சிறப்புப் பிரிவு ஒன்றை மாநில அரசுகள் உருவாக்கவேண்டும்; இந்த சிறப்புப் பிரிவுகளில் 24 மணி நேர ‘ஹெல்ப்லைன்’ வசதி இருக்கவேண்டும்; ஆணவக் குற்றங்கள் தொடர்பான வழக்குகள் அதற்கென உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படவேண்டும்.”
எனத் தனது தீர்ப்பில் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் எனத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால் 2021 வரை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதன்பின்னர் பொறுப்பேற்ற திமுக அரசு அதை செயல்படுத்தவேண்டும் எனக் கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும், விசிக நிறுவனர் தலைவர் என்ற முறையில் எழுச்சித் தமிழர் அவர்களும் தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் அளித்தோம். இதுவரை அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் சமூகநீதி மரபுக்கு மாறான சாதியவாதிகளும், மதவாதிகளும் இப்போது திமுக அரசுக்கு எதிராகக் கைகோர்த்து நிற்கிறார்கள். அவர்களைத் தலைதூக்க விடாமல் செய்யவேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு மட்டுமின்றி நம் எல்லோருக்குமே உள்ளது. எனவே உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் வலியுறுத்த வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு: Ways to improve the quality of Tamilnadu Universities
முனைவர் டி.ரவிக்குமார் – நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் தொகுதி), எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாதி மறுப்பு திருமணம்: சிபிஎம் அலுவலகம் சூறை… தலைவர்கள் கண்டனம்!
Bye Bye Pakistan: பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய ரசிகர்கள்!