எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வருமானத்திற்கு அதிகமாக ரூ.58 கோடி சொத்து சேர்த்ததாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி எஸ்.பி.வேலுமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையானது நீதிபதிகள் பி.என்.ரமேஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நேற்று இந்த வழக்கில் 48 பக்கம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தீர்ப்பளித்துள்ளது
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அதிமுக ஆட்சி காலத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரை ஆரம்பகட்ட விசாரணை நடத்தி வழக்கை கைவிடுவது என்று அதிமுக அரசு முடிவெடுத்த நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அவசரமாக ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்திருப்பது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயல்.
அறப்போர் இயக்கம் மற்றும் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில் எஸ்.பி.வேலுமணி டெண்டரை பரிசீலித்து முடிவெடுப்பார் என்று தெரிவிக்கப்படவில்லை. மாநகராட்சி விதிமுறைகளின்படி தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் தான் டெண்டர்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அரசியல்வாதிகள் என்றால் ஊழல்வாதிகள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. அதனடிப்படையில் மட்டும் இந்த வழக்கை பதிவு செய்திட முடியாது.
வேலுமணிக்கும் ஒப்பந்ததாரர்களுக்குமிடையேயான தொடர்பு குறித்து ஆரம்ப கட்ட விசாரணை நடத்தியிருந்தால், இந்த வழக்குப்பதிவை நியாயப்படுத்தியிருக்க முடியும்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுக்களில் டெண்டர் ஒதுக்கீடு முறை குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் டெண்டர் ஒதுக்கீடு பரிசீலனையில் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தலையீடு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
எதிர்கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவருக்கு எதிராக பழிவாங்கக்கூடிய நோக்கில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள் வழக்குப்பதிவு செய்வதற்காக குற்றவியல் சட்டத்தை பயன்படுத்த முடியாது.

வேலுமணி தலையீட்டால் டெண்டர் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை நிரூபித்திருந்தால், வேலுமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என்று மறுப்பதற்கு நீதிமன்றத்திற்கு எந்த ஒரு தயக்கமும் இருக்காது.
இந்த வழக்கை பொறுத்தவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்திருப்பதனால், எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்கிறோம்
எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை பொறுத்தவரை 2016 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வேட்புமனு தாக்கல் செய்த சொத்து விவரங்களின் அடிப்படையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து இந்த சொத்துகளுக்கு அவரிடம் விளக்கம் கேட்ட பிறகு தான் வழக்குப்பதிவு செய்ய முடியும் என்ற வேலுமணி தரப்பு வாதத்தை ஏற்க முடியாது என்று கூறி அவருடைய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.
செல்வம்
டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை- கேசவ விநாயகன் மோதல் எதிரொலி: தமிழக பாஜகவில் திடீர் மாற்றம்!
திமுக கவுன்சிலர் கடத்தியது கோகைன் போதைப்பொருளா? – கடலோர பாதுகாப்பு குழுமம் விளக்கம்