கச்சத்தீவு பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (ஏப்ரல் 1) குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு குறித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை அரசிடம் போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்காததால், கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது என்று தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கடந்த 2 நாட்களாக 1974ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்த கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசிவரும் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது பாஜக.
அதன்படி, பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று (ஏப்ரல் 1) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “நாடாளுமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். கச்சத்தீவு விவகாரம் பற்றி மக்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். கச்சத்தீவு பிரச்சனை எப்படி உருவானது என்பது மக்களுக்கு தெரிய வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இந்தியா-இலங்கைக்கு இடையே 1974ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடல் எல்லை ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டது.
கச்சத்தீவை விட்டுக் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என அப்போதைய பிரதமர் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால் தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழகமும் போதையும்… மோடி காட்டம்!
வாரிசு அரசியல் என்பது… மோடி கொடுத்த விளக்கம்!