வைஃபை ஆன் செய்ததும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வல காட்சிகள் மின்னம்பலம் யு ட்யூபில் லைவ் லிங்க் இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துக் கொண்டே சில சோர்ஸ்களிடம் விசாரித்து முடித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டிசம்பர் 28, 29 தேதிகளில் சென்னையை நோக்கி ஏராளமான மக்களும், அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டனர். டிசம்பர் 28 சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்தின் வீட்டில் இருந்து அவரது உடல் கோயம்பேட்டிலுள்ள தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தைக் கடப்பதற்கே பிற்பகல் 2 மணி ஆகிவிட்டது. அவ்வளவு மக்கள் திரளுக்கு இடையே விஜயகாந்தின் உடலை சுமந்து சென்ற வாகனம் மெதுமெதுவாக தேமுதிக அலுவலகத்தை அடைந்தது.
தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த திரண்டவர்களின் எண்ணிக்கை நேரம் ஆக ஆக அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஒருபக்கம் அரசியல் தலைவர்கள், சினிமா விஐபிகள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என கூட்டம் ஏறிக் கொண்டே இருந்ததால் கோயம்பேடே திணற ஆரம்பித்தது. போலீஸார் கோயம்பேட்டைச் சுற்றி போக்குவரத்து மாற்றம் செய்தனர்.
அப்போதும் கூட்டம் அதிகமாகி நெரிசல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது. பாஜக தலைவர் அண்ணாமலை டிசம்பர் 28 மாலை விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். அவருக்கு பாதுகாப்புக்கு வந்த சிஆர்பி எஃப் வீரர்கள் தான் அவரை விஜயகாந்த் உடல் அருகே அழைத்துச் சென்றனர்.
நேற்று இரவு வரையுமே சுமார் 25 ஆயிரம் பேர் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று நள்ளிரவு தாண்டியும் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்துக்கு வெளியே வரிசையில் பலர் காத்திருந்தனர். டிசம்பர் 29 காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை தீவுத் திடலில் விஜயகாந்தின் உடல் பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதிகாலை விஜயகாந்த் உடலை ஆம்புலன்ஸ் மூலம் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லும் போதும் மக்கள் கூட்டம் அந்த வாகனத்தை பின் தொடர்ந்தது.
டிசம்பர் 29 காலை முதல் பிற்பகல் வரை சாரை சாரையாக மக்கள் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வந்துகொண்டே இருந்தனர். ஒரு மணி வரைக்கும் தான் அஞ்சலி செலுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டாலும் மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருந்ததால் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் தாமதமானது. பிறகு ஒரு வழியாக அஞ்சலி செலுத்துவதற்கு மக்களை அனுமதிக்காமல் நிறுத்தி அதன் பின் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.
மாலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடல் தேமுதிக அலுவலகமான கோயம்பேடுக்கு சென்றடைந்தது. வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஊர்வலமாக சென்றவர்கள், ஆங்காங்கே சாலையோரம் நின்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் என்று ஒட்டு மொத்தமாக கணக்கு பார்த்தால் 28, 29 தேதிகளில் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தியவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் என்று அரசுக்கு இன்று மாலை தகவல் கிடைத்திருக்கிறது.
2016 இல் ஜெயலலிதா, 2018 இல் கலைஞர் என்று சமீபத்திய வருடங்களில் சென்னை இரு முக்கிய தலைவர்களின் இறுதி ஊர்வலங்களை சந்தித்திருக்கிறது. அவர்கள் பற்பல ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர்கள், அவர்களின் கட்சிகள் 35 சதவிகிதத்துக்கு மேல் வாக்கு வங்கி உள்ளவை இப்படிப்பட்ட காரணங்களால் அவர்களுக்கு லட்சங்களில் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்டனர்.
அதேநேரம் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவர் ஆக்டிவ் அரசியலில் ஈடுபட்டு முழுதாய் ஏழு வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இன்றும் விஜயகாந்துக்கு கூடிய சுமார் ஒன்றரை லட்சம் பேர் என்ற கூட்டம் பலரையும் பிரமிக்க வைத்திருக்கிறது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் டிவியிலும், யு ட்யூபுகளிலும் லைவ் ஆகும் காட்சிகளை கண்டோர் மொத்தம் 25 லட்சம் பேர் இருக்கலாம் என்றும் அரசுக்கு கிடைத்திருக்கும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தால் தேமுதிகவுக்கே மீண்டும் ஓர் புத்துயிர் பிறந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…