ராஜஸ்தானில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 69 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தம் 200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 199 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கங்காநகர் மாவட்டத்தின் காரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் இறந்ததால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாஜக – காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள காங்கிரஸும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் தீவிரம் காட்டுகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜூன் ராம் மேக்வால், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர், பாஜக மாநில தலைவர் சி.பி. ஜோஷி உள்ளிட்டோர் காலையிலேயே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்.
ராஜஸ்தான் தேர்தல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க முன்வர வேண்டும். மிகப் பெரிய சதவீதத்தில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க உள்ள இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இறுதியாக 69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலின் போது ராஜஸ்தானில் 74.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
தேஜஸுக்கு பின்னால கங்கனா கவர் ஸ்டோரி: அப்டேட் குமாரு
உங்கள் தொகுதி கோயிலுக்குச் சென்று… தெலங்கானா காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு திடீர் உத்தரவு!