இந்தியா கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்? – கார்கே சொல்லும் கணக்கு
பாஜக எல்லா மாநிலங்களிலும் தோற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் எப்படி 400 இடங்களைக் கைப்பற்றுவோம் என்று மோடி சொல்கிறார் என வியப்பாக இருக்கிறது என கர்நாடக மாநிலம் கல்புரகியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு அரசியலில் அப்படி ஒரு சரியான நம்பரை சொல்வது கடினம் என்று தெரிவித்த அவர், பாஜக ஏற்கனவே வெற்றி பெற்ற இடங்களை இழந்து கொண்டிருக்கிறது என்று சில எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
அப்போது பேசிய கார்கே, “கர்நாடகாவில் கடந்த முறை நாங்கள் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றோம். இந்த முறை பாஜகவின் பிரகலாத் ஜோஷியே சொல்கிறார் நாங்கள் நான்கு இடங்களில் வெற்றி பெறுவோம் என்று. இது கடந்த முறையை விட அதிகரிப்பா அல்லது குறைவா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “தெலுங்கானாவில் 2019 இல் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம். இப்போது அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கிறது. அங்கும் காங்கிரசின் இடங்கள் அதிகரிக்கும்.
தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக் கட்சியான திமுக வலிமையாக இருக்கிறது. கேரளாவில் நாங்கள் அதிக இடங்களைப் பெறுவோம். மகாராஷ்டிராவில் எங்கள் கூட்டணி 50% சதவீதத்திற்கும் அதிகமான இடங்களைப் பெறும். இதில் பாஜகவின் தொகுதிகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
“ராஜஸ்தானில் நாங்கள் ஜீரோவில் இருந்தோம். இந்த முறை 7 முதல் 8 தொகுதிகளை வெல்வோம். மத்தியப் பிரதேசத்தில் நாங்கள் இரண்டு தொகுதிகளை மட்டும் வைத்திருந்தோம். அங்கும் எங்கள் கணக்கு அதிகரிக்கும். சத்தீஸ்கரிலும் நாங்கள் அதிகமாக வெல்வோம். எங்கெல்லாம் அவர்கள் 100% வென்றிருந்தார்களோ, அங்கெல்லாம் அவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டிருக்கிறது. எந்த அடிப்படையில் 400 தொகுதிகள் என்று சொல்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து Vs போலீஸ்: முதல்வருக்கு TNSTC தொழிலாளர்கள் கோரிக்கை!
ராஜேஷ் தாஸ் வழக்கு: காலையில் கைது.. மாலையில் ஜாமீன்- என்ன நடந்தது?
சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!