ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த தேர்தலில் பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலமாக இருக்கிறது. ராஜஸ்தானில் மொத்தம் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 மற்றும் 2019 இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களிலும் ராஜஸ்தானில் உள்ள அனைத்து தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை கடந்த இரண்டு தேர்தல்களைப் போலவே பாஜக 25 தொகுதிகளையும் கைப்பற்ற முடியுமா என்ற கேள்வியே மேலோங்கி நின்றது. ஆனால் இரண்டு கட்டங்களாக ராஜஸ்தானில் நடந்து முடிந்த தேர்தல்களைக் குறித்து ஆராய்ந்தவர்கள் இந்த முறை அப்படி நடப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள்.
காங்கிரசைப் பொறுத்தவரை ராஜஸ்தானில் இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் அவர்கள் வெற்றி பெறும் ஒவ்வொரு தொகுதியும் கூடுதல் பலனாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாஜக இழக்கும் ஒவ்வொரு தொகுதியும் அவர்களுக்கு தேசிய அளவில் பின்னடைவாக அமையும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதன் காரணமாகத் தான் இந்த முறையும் 25 தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று ராஜஸ்தானைக் குறிவைத்து பிரதமர் மோடி, அமித்ஷா, உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடர் விசிட்களை அடித்தனர்.
இந்தியா கூட்டணிக்கு எத்தனை இடங்கள்?
இந்த முறை நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி ராஜஸ்தானில் 5 முதல் 6 தொகுதிகளில் வலிமையான இடத்தில் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து மேலும் 4 முதல் 5 தொகுதிகளில் கடுமையான போட்டியை பாஜகவிற்கு கொடுத்திருப்பதாக ராஜஸ்தானின் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ராமர் கோயில் விவகாரம், காஷ்மீரின் பிரிவு 370 நீக்கம் என்று சில இந்துத்துவா ஃபேக்டர்கள் பாஜகவிற்கு வலுவான இடத்தினைக் கொடுத்திருப்பதாகப் பார்க்கப்பட்டாலும் ராஜஸ்தானில் வாக்கு சதவீதம் 4.6% குறைந்திருப்பது பாஜகவிற்கு சில தொகுதிகளில் பின்னடைவைக் கொடுக்கும் என்று பார்க்கப்படுகிறது.
வாக்கு சதவீத குறைவை கவலைக்குரியதாக பார்த்த பாஜக
குறிப்பாக முதல் கட்டத் தேர்தலில் வாக்கு சதவீதம் 5.8% குறைந்தது. இது ஆளுங்கட்சிக்கு ஆதரவான அலை எதுவும் இல்லாததைக் குறிப்பதாக பாஜக கருதியதால், உடனடியாக நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவசரக் கூட்டத்தினைக் கூட்டி அடுத்த கட்டத் தேர்தலில் பாஜகவின் வாக்காளர்கள் அனைவரையும் வாக்களிக்கச் செய்து வாக்கு சதவீதத்தினை அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் 3.4% சதவீதம் குறைந்தது.
காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகள்
ராஜஸ்தான் மக்கள் இந்த முறை தேசிய அளவிலான விவகாரங்களைக் காட்டிலும், உள்ளூர் விவகாரங்களை மையப்படுத்தியும், வேட்பாளராக யார் நிற்கிறார் என்பதை மையப்படுத்தியுமே வாக்களித்திருக்கிறார்கள் என்கிறார்கள் அம்மாநில அரசியல் விமர்சகர்கள். மேலும் சாதி ரீதியான கணக்குகளும் வொர்க் அவுட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது. மோடி என்ற இமேஜை மட்டுமே பாஜக முன்னிறுத்தியதால் தான் சில இடங்களில் பின்னடைவை சந்திப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் எளிமையாக சொல்வதென்றால் ராஜஸ்தானில் பாஜகவை முன்னுக்கு நகர்த்தும் மோடியின் இமேஜே சில இடங்களில் நெகட்டிவாகவும் மாறியிருக்கிறது.
டாசா, நாகெளர், சூரு, சிகார், ஜுன்ஜுனூ ஆகிய 5 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பார்மர், பன்ஸ்வாரா, பாரத்பூர், ஜலூர், கோடா உள்ளிட்ட தொகுதிகளில் கடுமையான போட்டியை பாஜகவிற்கு காங்கிரஸ் கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பலவீனப்படுத்தப்பட்ட வசுந்தரா ராஜே
பாஜகவைப் பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்ட ராஜஸ்தானின் மாநிலத் தலைவர்கள் மோடியின் தலைமையினால் பலவீனப்படுத்தப்பட்டது முக்கியமான சிக்கலாக மாறியிருக்கிறது. ராஜஸ்தானில் கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே வசுந்தரா ராஜேவின் ஆதரவாளர்கள் ஒதுக்கப்பட்டனர். இந்த தேர்தலிலும் அது தொடர்ந்தது. இந்த விரக்தியில் வசுந்தரா ராஜே சிந்தியா பிரச்சாரங்களில் இருந்து பெருமளவு ஒதுங்கி விட்டார் என்றும், அவரது மகன் துஷ்யந்த் சிங் போட்டியிடும் ஜல்வார் தொகுதியில் மட்டுமே அவர் வேலை செய்தார் என்றும் அரசியல் விமர்சகர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதைத் தவிர்த்து, முதல் முறை வென்ற எம்.எல்.ஏவை ராஜஸ்தானின் முதலமைச்சராக ஆக்கியது என பல விவகாரங்கள் பாஜகவில் உட்கட்சிப் பூசல்களை ராஜஸ்தானில் அதிகப்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஜகவிற்கு பின்னடைவாக மாறிய தொகுதிகள்
சூரு தொகுதியில் பாஜகவின் சிட்டிங் எம்.பியான ராகுல் கஸ்வானுக்கு சீட்டு மறுக்கப்பட்டதால், அவர் காங்கிரசில் இணைந்து காங்கிரஸ் சார்பாக அத்தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். இது பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக மாறியிருக்கிறது.
சுயேட்சை எம்.எல்.ஏ-வான ரவீந்திர சிங் பாத்தி பார்மர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட பாஜகவில் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படாததால் அவர் சுயேட்சையாக அத்தொகுதியில் களமிறங்கியதால், பாஜக இத்தொகுதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கைலாஷ் செளத்ரி மூன்றாம் இடத்திற்குப் போவதற்குக் கூட வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
வசுந்தரா ராஜேவின் ஆதரவாளரும், குர்ஜார் சமூகத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய தலைவருமான பிரகலாத் கஞ்சல் பாஜகவில் கோட்டா தொகுதியினை எதிர்பார்த்தார். அவருக்கு சீட்டு மறுக்கப்பட்டதால், அவர் காங்கிரஸ் சார்பாக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் பாஜக சார்பில் அத்தொகுதியில் போட்டியிடும் மக்களவை சபாநாயகரான ஓம் பிர்லாவுக்கு கடுமையான போட்டி உருவாகியிருக்கிறது.
இது போல் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்கள் பல தொகுதிகளில் பாஜகவிற்கு தலைவலியாகியுள்ளது.
ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சிக் கூட்டணியின் முக்கியத்துவம்
மேலும் ஜாட் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற கட்சியான ஆர்.எல்.பி எனப்படும் ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி இப்போது இந்தியா கூட்டணியில் இருக்கிறது. இந்த கட்சி கடந்த தேர்தலின் போது பாஜக கூட்டணியில் இருந்தது. விவசாயிகள் போராட்டத்தினை பாஜக கையாண்ட விதத்தினை எதிர்த்து கூட்டணியை விட்டு வெளியேறியது இக்கட்சி. ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால் இந்தியா கூட்டணியின் சார்பில் நாகெளர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆர்.எல்.பி கட்சி ஜாட்களின் வாக்குகளைப் பெருமளவில் பெற்றிருப்பதால் இத்தொகுதியின் முடிவு இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஆர்.எல்.பி கட்சியின் கூட்டணி மத்திய மற்றும் மேற்கு ராஜஸ்தானில் ஜாட்களின் வாக்குகளை இந்தியா கூட்டணிக்கு பெருமளவில் பெற்றுத் தந்திருப்பதாக ராஜஸ்தான் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதிய ஆதிவாசி பார்ட்டியின் வளர்ச்சி
கடந்த 10 ஆண்டுகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் மற்றும் பாஜக தவிர்த்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கட்சியாக BAP எனப்படும் பாரத் ஆதிவாசி பார்ட்டி பார்க்கப்படுகிறது. ஆதிவாசி மாணவர்கள் முன்னெடுத்த அரசியல் 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கட்சியாக உருவெடுத்தது. இக்கட்சி ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்தத்திற்கு எதிரான கட்சியாக பழங்குடி மக்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துள்ளது. ராஜஸ்தானின் தெற்கு எல்லையில் உள்ள டங்கார்பூர் மற்றும் பன்ஸ்வாரா மாவட்டங்களில் மக்களிடையே முக்கியமான கட்சியாக பாரத்ஆதிவாசி கட்சி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் உருவெடுத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுதும் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றிருந்தாலும் இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது. மூன்று தொகுதிகளை பாரத் ஆதிவாசி பார்ட்டி கைப்பற்றியது. 4 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. நான்கு தொகுதிகளில் பாரத் ஆதிவாசி பார்ட்டி இரண்டாம் இடம் பிடித்தது.
இந்த தேர்தலைப் பொறுத்தவரை முதலில் 6 மக்களவைத் தொகுதிகளுக்கு தனியாக வேட்பாளர்களை அறிவித்தது ஆதிவாசி பார்ட்டி. ஆனால் கடைசி நேரத்தில் அக்கட்சி இந்தியா கூட்டணியில் இணைக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பன்ஸ்வாரா தொகுதியில் பாரத் ஆதிவாசி பார்ட்டியின் எம்.எல்.ஏ வான ராஜ்குமார் ராவத் போட்டியிடுகிறார். இவர் பாஜகவிற்கு கடும் போட்டியைக் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி பன்ஸ்வாராவில் பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்ததற்கு இந்த கட்சியின் வளர்ச்சியே காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த கூட்டத்தில் தான் அவர் முதல் முறையாக முஸ்லீம்களைக் குறிவைத்து ஊடுருவல்காரர்கள் என்று பேசினார். ராஜ்குமார் ராவத்தை எதிர்கொள்ள முஸ்லீம்களுக்கு எதிராக ஆதிவாசி மக்களிடையே உள்ளூர் பாஜக தலைவர்களும் பேசி வருகிறார்கள்.
நெகட்டிவாக மாறிய 400 தொகுதி முழக்கம்
பாஜக தலைவர்கள் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றுவோம் என்று பேசியது பாஜகவிற்கு பின்னடைவையே கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக 400 தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வருவோம் என பாஜக தலைவர்கள் பேசியது இட ஒதுக்கீடு பறிக்கப்படுமோ என்ற அச்சத்தினை SC, ST மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. SC, ST சமூகத்திலிருந்து அரசு ஊழியர்களாக இருக்கும் பலர் இட ஒதுக்கீடு பறிக்கப்படும் என்று கிராமங்கள்தோறும் எச்சரித்து வருகிறார்கள். இதனை எதிர்கொள்ளும் விதமாகத் தான் மோடி, காங்கிரஸ் வந்தால் SC, ST இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்று பேசினார்.
காங்கிரசுக்கு சாதகமாக அமைந்த மற்றொரு விவகாரமாக சொல்லப்படுவது என்னவென்றால், முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோரிடையே இருந்த மோதல் இந்த தேர்தலில் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை. இது காங்கிரசுக்கு பாசிட்டிவாக பல விடயங்களை களத்தில் உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.
இந்த எல்லா காரணங்களும் ஒன்றுசேர்ந்து கடந்த இரண்டு தேர்தல்களாக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத காங்கிரசுக்கு 5 முதல் 6 தொகுதிகளை இந்த முறை பெற்றுத் தருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியிருப்பதாக ராஜஸ்தான் அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும் இவை தவிர்த்து கடும் போட்டியாகக் கருதப்படும் 4 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்று சொல்லப்படுகிறது. ராஜஸ்தானில் பாஜகவே அதிக இடங்களை வென்றாலும், அங்கு இழக்கும் ஒவ்வொரு தொகுதியும் தேசிய அளவில் அவர்களுக்கு ஒரு பின்னடைவாகவே அமையும் என்று பார்க்கப்படுகிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்
கலைஞர் கனவு இல்லம்: ஒரு லட்சம் வீடுகள்… தமிழக அரசு முக்கிய அப்டேட்!
சைதை துரைசாமி மருத்துவமனையில் அனுமதி: என்னாச்சு?
ராஜஸ்தான்ல ஒரு இடம் பாஜக தோற்றால் கூட தேசிய அளவில் பின்னடைவு!!🤣🤣அதே நேரம் தமிழ்நாடு,கேரளா,ஆந்திராவில் பாஜாக ஒரு இடத்தில் வென்றால் கூட தேசிய அளவில் எந்த மாற்றமும் வராது..🤔🤔🤔🤔எதுக்குயா இந்த மாதிரி மைன்ட் செட்லயே கட்டுரை எழுதுறீங்க??
🤮🤮🤮🤮🤮