வைஃபை ஆன் செய்ததும் தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிர்வாகிகள் கூட்டப் படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உடனடியாக எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தீவிரமான போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி அவ்வளவு வலுவான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனங்கள் கட்சிக்குள்ளேயே எழுந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை எந்தெந்த வகைகளில் போராட வேண்டும் என்பதை எல்லாம் பட்டியலிட்டு அனைத்து மாநில தலைமைகளுக்கும் அனுப்பி உள்ளது. அதன்படி நேற்று மார்ச் 31ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டினார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி.
இந்தக் கூட்டத்திலேயே 15 மாவட்ட தலைவர்கள் ஆப்சென்ட் ஆகி இருந்தார்கள். வழக்கமாக மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் என்றால் சத்தியமூர்த்தி பவனின் கீழ் தள அரங்கம் நிரம்பி இருக்கும். ஆனால் நேற்று அரங்கத்தில் பல இருக்கைகள் காலியாகவே இருந்தன.
இந்த கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் அழகிரி, ‘நமது தேசிய தலைமை ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த சொல்லி அறிவித்திருக்கிறது. இங்கே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாம் எவ்வளவு கடனில் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவர்களே அப்படி என்றால் மாவட்ட தலைவர்கள் ஆகிய உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டமும் எனக்கு தெரியும். ஆனாலும் நாம் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே உங்களால் முடிந்த அளவு போராட்டங்களை கூர்மைப்படுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்’ அழகிரி.
அப்போது சேலம் மாவட்ட தலைவர் அர்த்தநாரி, ‘சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் இல்லாத மாவட்டங்களுக்கெல்லாம் நமது எம்பி.,. எம்.எல்.ஏ.க்களை அனுப்பி ஒருங்கிணைக்க வைத்தால் இன்னும் போராட்டம் வலுப்படும்’ என்று கூறியுள்ளார்.
தமிழ்நாட்டிலேயே ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை எதிர்த்து கடுமையாக போராட்டம் நடத்தக்கூடிய மாவட்டங்கள் சிலதான். கன்னியாகுமரியில் இன்று வரை தினம் தினம் போராட்டங்கள் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. கன்னியாகுமரி பொதுவாகவே காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கும் இடம். அதைத் தவிர திண்டுக்கல் மாநகரம், வடசென்னை போன்ற ஒரு சில மாவட்டங்களில் தான் காங்கிரஸ் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
கேரளாவில் காங்கிரஸ்காரர்கள் நடத்திய தீப்பந்த ஊர்வலம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அதேபோல சென்னையில் நடத்த முயன்ற போது போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் திண்டுக்கல் மாநகர் மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் தீப்பந்த ஊர்வலம் நடந்திருக்கிறது.
கூட்டம் முடிந்ததும் தனிப்பட்ட முறையில் அழகிரியிடம் மாவட்ட தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ’மற்ற மாநிலங்களில் நடக்கும் போராட்டங்களை பாருங்கள். நாம் தமிழ்நாட்டில் 8 எம்பிக்கள், 18 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிறோம். அவர்கள் செலவு செய்தால் இன்னமும் போராட்டங்களை வீரியமாக நடத்தலாம். ஆனால் அவர்கள் இன்னமும் நாடாளுமன்றம், சட்டமன்றம் தாண்டி போராடவில்லை’ என்று அழகிரியிடம் குமுறியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல… திமுக மாசெக்கள் தங்களது மாவட்ட காங்கிரஸ் தலைவர்களிடம், ‘என்னய்யா ராகுல் காந்தி எம்பி பதவிய பறிச்சிட்டாங்க. ஆனா நீங்க ஒண்ணுமே நடக்காதது மாதிரி இருக்கீங்க? ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்ல வேட்பாளர் மட்டும்தான் காங்கிரஸ். வேலை பாத்தது பூரா திமுகதான். இப்ப உங்க கட்சிக்கு ஒரு பிரச்சினைனு வந்தப்பவும் போராட்டம் வீரியமா நடத்தாம இருக்கீங்களே?’ என்று பேசியிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல… ஏற்கனவே பல மாசெக்கள்,அமைச்சர்கள் காங்கிரஸுக்கு கொடுக்கும் சீட்டுகளின் எண்ணிக்கையை மேலும் குறைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதை சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு, ‘காங்கிரஸ் பலம் இவ்வளவுதான். அதனால் குறைவான சீட்டையே அவர்களுக்கு கொடுக்கலாம்’ என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினிடமும் சொல்லியிருக்கிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் கொடுத்த எட்டு தொகுதிகளில் எவை எவற்றை மீண்டும் கொடுக்கலாம், எங்கே கொடுக்க வேண்டாம் என்ற விவாதமும் திமுக மாசெக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
டோல் கட்டண உயர்வு : லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்!
விஜய் சேதுபதி நடிக்கும் புது வெப் சீரிஸ்!