how many seats allocated for ops

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவிக்கு எத்தனை தொகுதிகள்?

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ்,  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளுடன்  கூட்டணியை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து பாமக, தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கடந்த மார்ச் 10-ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் பாஜக மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி குழு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த பிறகு கூட்டணியை இறுதி செய்தனர். தொடர்ந்து மார்ச் 11-ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனும் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்தார்.

இந்தசூழலில், நேற்று (மார்ச் 12) இரவு டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிண்டி லீ மெரிடியன் ஓட்டலில் மத்திய அமைச்சர்கள் வி.கே.சிங், கிஷன் ரெட்டி, எல்.முருகன் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை இரண்டாவது மாடி 301-வது அறையில் சந்தித்தனர். இரவு 11.15 மணிக்கு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தை 2 மணி வரை தொடர்ந்தது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, குக்கர் சின்னத்தில் போட்டியிட பாஜக தலைமையிடம் டிடிவி கோரிக்கை வைத்துள்ளார். ஓபிஎஸ், “தேர்தல் ஆணையம் ஒதுக்கும் தனிச்சின்னத்தில் நாங்கள் போட்டியிடுவோம். தாமரை சின்னத்தில் போட்டியிட எங்களை நிர்பந்திக்க வேண்டாம்” என்று பாஜக தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

10 தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி, ஓபிஎஸ் தரப்பில் பாஜகவிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு சம்மதிக்காத பாஜக தலைவர்கள், “கூட்டணியில் இன்னும் சில பேர் இணைவார்கள். அதனால் 7 தொகுதிகளை ஒதுக்குகிறோம்” என்று தெரிவித்துள்ளனர். இதனால் நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தொகுதி பங்கீடு குறித்து இறுதியான முடிவு எடுத்த பிறகு தெரிவிக்கிறேன்.

அமமுக போட்டியிடும் சின்னங்கள் தொடர்பாக எந்த நிர்பந்தங்களும் இல்லை. எங்களுக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னம் வேண்டுமென உரிய நேரத்தில் தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். குக்கர் சின்னம் எங்களுக்கு கிடைத்து விடும் என நம்புகிறோம்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அண்ணாமலையிடம் கொடுத்துள்ளோம்” என்றார்.

தொடர்ந்து குடியுரிமை சட்டம் குறித்து பேசிய டிடிவி தினகரன், “குடியுரிமை திருத்தச் சட்டம் இங்கு இருப்பவர்கள் குடியுரிமையை பறிப்பதற்கான சட்டம் கிடையாது.

அகதிகளாக வந்திருந்தவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதற்கான சட்டம். இதனை தவறாக பிரச்சாரம் செய்கிறார்கள். சிறுபான்மை மக்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் குழப்புகிறார்கள். இதில் என்ன உண்மை உள்ளது என்று அவர்களுக்கு தெரியும்.

தேர்தல் நேரத்தில் நாங்கள் தமிழகம் முழுவதும் குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், இந்த சட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தின் மூலம் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிப்போம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “இரண்டாம் கட்டமாக கூட்டணி பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னம் பயன்படுத்துவதில் தற்காலிகமாகத் தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது.

சின்னம் குறித்த சாதக பாதகங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கும். விரைவில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து அறிவிப்போம்” என்று தெரிவித்தார்.

வணங்காமுடி, செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓட்டுநர் பழகுநர் உரிமம் (LLR):  இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts